V.P. Vasuhan

Life without Painting !!!

பேசும் வண்ணங்கள்

இங்கே வடிவங்களும், இங்கே வண்ணங்களும், இங்கே எண்ணங்களும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும், கொட்டிக்கிடக்கின்றது. அவற்றை ஒரு மனிதன் தன் தூரிகைக்குள் அடக்க முட்படுகிறான். அதன் சாத்தியங்கள் இயங்கியல் உலகில் அசாத்தியங்களாகவே இன்னும் நீள்கின்றது. அதற்கு டாவன்சி முதல் வான்கோ வரை விதிவிலக்கல்ல ஆனாலும் தூரிகையை தொட்டவன் தன் ஓவியங்களுக்குள் சொல்லும் கதைகள் சொல்லியடங்கா. அந்த வகையில் ஈழத்து தமிழ் பரப்பில் அறியப்பட்டும், அறியப்படாதவனுமாய் உலக அளவில் ஓவியங்களை காட்சிப்படுத்தும் ஓவியர் திரு வாசுகன் அவர்கள் 10-01-2020 ஞாயிரு அன்று முகநூல் நேரலையூடாக காலையும்10:00- 10:45 மணி வரையும் 17:00 மணி தொடக்கம் 18:00 வரை அவர் ஓவியங்களின் சில தொகுதியை காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றை பார்க்ககிடைத்தது மன மகிழ்ச்சியே. பிரான்ஸ் நகரில் பல இடங்களில் பல தடவை அவருடைய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டபோதும். என்னால் சென்று பார்க்கமுடியவில்லை அதன் இழப்பை நேரலையில் பார்வையிட்டபோது என்னால் உணரமுடிந்தது.

வாசுகன் தனது ஓவியங்களுக்கு பயன்படுத்தும், கோடுகள் வண்ணங்கள், ஒளிஅளவு, வடிவம், உருவம், இழையமைவுகளை பார்க்கும் பொழுது நாங்களும் இப்படிவரைந்துவிடலாமே என்று எண்ணத்தோன்றும் இலகுநிலைபோல இருக்கும் நவீன உத்தி ஓவியங்கள் அவருடையது. ஆனால் அது முடியாது. பார்பவர்க்கு அப்படியான தோற்றப்பாட்டை மட்டுமேதரும். அவர் படைப்புத்திறனும் அவர் கருத்தாளுமையும், ஓவியத்தை பார்பவனுக்கு ஓவியத்துக்கூடாக எதை சொல்லவேண்டுமோ அதை எளிமையாகவும் நுணுக்கமாகவும் சொல்லியேதீரும்.

வாசுகனின் ஓவியங்கள் வெறுமனையே காட்சிகளை காண்பிப்பதன்று அது மனிதத்தையும் மனிதவுணர்வுகளையும் பேசுகின்றது. அவர் இயற்கையின்மீது கொண்ட காதலையும், இயற்கையில் கொண்ட நம்பிக்கையை பேசுகின்றது. தன் தாய்மொழி தமிழின் மீது கொண்ட பற்றைபேசுகிறது. தமிழரின் பண்பாட்டைபேசுகிறது, மனித நினைவுகளை அதன் துயரத்தை பேசுகிறது, பெண்ணைபற்றி, ஆணைப்பற்றி, ஆக்கத்தைப்பற்றி, அழிவைப்பற்றியென்று அவர் ஓவியத்தூண்டல்களை குறிப்பிட்டுகொண்டேபோகலாம்.

வாசுகன் வண்ணங்களால் மட்டும் ஓவியம் தீட்டுபவர் அல்ல. அவர் ஒட்டுச்சித்திர பாணியில் மண்ணை, மரத்தை, மஞ்சளை, மிளகாய்தூளை, கல்லையென்று, கிடைப்பவற்றை கலையாக்குகின்றார். தன் கலைக்கும், கவிதையை, திருக்குறளை, தமிழ் எழுத்துக்களை அழகுக்கும் அர்த்தத்திற்கும் பாதீடு செய்யும் உத்தி அற்புதம். தன் ஓவியங்களை சைப்பிரஸ், பிரான்ஸ், யப்பான் என்று பல நாடுகளில் பல் இன மக்கள் பார்வைக்கு வைக்கின்றார்.

அவரை ஓவியராக நான் அறிந்தவரை பதினான்கு வருடங்கள் ஆனால் அவர் அனுபவம் அதற்கு மேலானது. அவர் உழைப்பு எந்த அவளவிற்கு பாராட்டப்படவேண்டியதோ. அவருக்கு துணைநிற்கும் அவர் குடும்பமும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

வாசுகனின் ஓவியங்கள் தொடர்பாக என்னோடும் வாசுகனோடும் பழக்கமான சில நண்பர்கள் கூறியதாவது. வாசுகனின் ஓவியங்கள் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும் புரிந்து கொள்வதற்கு கடினமாகவும் இருக்கிறது அதனாலையே அவர் ஓவியங்கள் பிடிக்காமலே போய்விட்டது. அவ்வாறு கூறியவருக்கு என்னளவில் நான் கூறியது. ஒரு படைப்பின்மீது பார்த்தவுடன் விளங்கவேண்டுமென்ற கட்டாயத்தை நாங்கள் முன் வைத்தால் அது படைபாளனின் படைப்பின் வீரியத்தை குறைத்து விடுவதாகிவிடும். அவர் படைப்பை உணர்ந்துகொள்ளுமளவிற்கு எங்களை வளர்த்து விடுவதே எங்களுக்கும் சிறப்பு அவர் படைப்புக்களுக்கும் சிறப்பு. வாசுகன் ஓவியங்களும் அவர் உழைப்பும் இன்னும் இந்த தமிழ் சமூகத்திற்கு தேவை என்பது மிகையல்ல.

11-05-2020 Paris
ப.பார்தீ