VP. Vasuhan

இளம் கலைஞன் ஓவியர் வாசுகன்

பிரான்சில் வாழும் ஈழுத் தமிழன் இளம் கலைஞன் ஓவியர் வாசுகனோடு ஓவியத்திலும், நாடகம், நடனம் ஆகிய கலைகளில் இளவயதுக் கலைஞன் ஈடுபட்டிருக்கும் சுறுசுறுப்பைக் காணும்போது புலத்துவாழ் இளைய சமுதாயத்தினருக்கு வாசுகன் ஓர் முன்மாதிரியாக இருப்பதையும் வளர்வதையும் எடுத்துக்காட்டுவது நல்லதெனக் கொள்கின்றேன். வாசுகன் தமிழீழம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சைப்பிரஸ் நாட்டில்ப் புலம்பெயர்ந்து அங்கு தன் ஓவியக்கலையின் கை வண்ணத்தை எண்ணங்களில் ஆழமாக வேரூன்ற வைத்தவா. சைப்பிரஸ் நாட்டுப் புகழ் பெற்ற ஓவியக் கலைஞர் ‘கிளின் கியூஸ்” அவர்களின் பயிற்றுவிப்பில் ஓவியக்கலையின் அணுக்களை மிகத் தெளிவாகக் கற்றவர். பிற்பாடு 2000ம் ஆண்டு ஃபிரான்ஸ் வந்த காலத்தில் இவருக்கு மிகச் சிறந்த வழி காட்டலுக்கு ஏற்றவகையில். பிரெஞ்சுப் பிரயையான மேடம் ‘அன்னிக் சன்சோனி’ அவர்களின் ஒத்தாசையும் வழிநடத்தலும் கிடைத்தது. அன்றிலிருந்து அந்தப் பெண்மணி வாசுகனின் ஓவியத் திறன் கண்டு கண்காட்சி நடாத்தும் சீரிய நட்பணிக்கு உதவிவருவதை நானறிவேன். (2000ல் இருந்து 2007வரையான) ஒவியக் கண்காட்சி நடத்த இப்பெண்மணிதான் உந்து சக்தி. வாசுகன் தான் இதுவரை வரைந்த ஓவியங்கள் தனக்கு மன நிறைவைத் தரவில்லை என்கின்றார். இதுவரையில்ப் படைத்த ஓவியங்கள் பல நாட்டவர்களாலும் புகழ்ந்து போற்றப்பட்டுள்ளது. இப்போது 24 கார்த்திகை தொடங்கி 12-01-2008 வரை நடைபெறும் ஓவியக் கண் காட்சியில்ப் புதிதாக வரையப்பட்ட ஓவியங்கள் இடம்பெறுவது மேலும் தன் ஓவியத்திற்கு வலுச்சேர்க்கும் எனச் சொல்கின்றார். முன்னேறி வரும் தோற்றம் தெரியும் இந்த வேளையில்ச் சற்றேனும் தேக்கமடைய விடாது ஆக்க சக்திக்கு உந்து சக்தியாக இவரது தூரிகை வீச்சு இருக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு இந்த இளம் ஓவியனை நெருங்கினேன். கற்கைத் திறனும்,கற்பிக்கும் முறைமையும, ஆர்வமும், தேடலும், பிறந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் பாங்கும். எதிர்காலத்தை- நிகழ்காலத்தில்ப் புலம் பெயர்ந்து வாழும் ஃபிரான்ஸ் மண்ணில் கால்கோல்யிட்டு மண்ணில்க் கால் பதிக்கக் கூடிய ஓவியன். நடனக் கலைஞராக முன்னேற்றம் கண்டு வாழ்பவரிடம். புதுமை நோக்கி ஓவியனைக் கலைக்கண் பார்வையுடன் கலை முகத்தைப் பார்த்தேன்! பின்பொரு முறை கேள்விகளைத் தொடுத்தேன்! சற்றுத் தயங்கியவர் சிறிது சிறிதாக இடைவெளி விட்டுத் தெளிவாகப் பேசினார். இவரது ஓவியங்களில் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் நான்கிலும் ஒவ்வொரு உத்திகள் பாவிக்கப் பட்டிருப்பதை அவதானிக்கலாம். வர்ணங்களைத் தீட்டிய மாதிரி உத்தி, வர்ணங்களை அப்பிச் சிதைத்த மாதிரி உத்தி, கோடுகளை மட்டும் தீட்டிய உத்தி, மென்மையும் கருமையும் பயன்படுத்திய தனித்துவமான உத்தி. எண்ணத்தில் எழும் வர்ணனைகளையும், உள்ளத்தில் உருவாகும் உந்து சக்திகளையும் எழுதுகோல் கொண்டு எழுதுவது போலத் தூரிகை கொண்டு ஓவியக்காட்சியில் துலங்கிட வைப்பது எளிதான விடையமில்லை! மிகத் தெளிவான, வலுவான, உணர்வான, உற்சாகமான கலை நுணுக்கம், நுண்ணறிந்த திறன். நிறையக் கோடுகள் இடும்போது ஏற்படும் மிகைப்பின் வார்ப்பின் வளர்நிலை நிதானிப்புத் தேவை. அந்தளவுக்கு உள்நுளைவு ஓவியத்தோடு ஒன்றிப்பு வேண்டும். மேற்கத்திய நாடுகளில் தோன்றி நவீன ஓவியத்தில் நமது ஓவியர்கள் எத்தனை பேர் தேறினார்கள். எனும் கேள்வி நிற்கும் இவ்வேளையில் நம் மண்ணின் மானத்தையும் போர்க்கால அவலத்தையும், ஓலத்தையும், ஓடுதலையும், விடுதலையின் வீரியத்தையும், பலரது தூரிகைகள் வெளிப்படுத்தியுள்ளது மனம் கொள்ளத்தக்கது. அழகுணர்வுடன் உணர்வுகளை கருத்துக்களை இரு பரிமானத்தில் வெளிப்படுத்துவதையே ஓவியக்கலை என்பர். வடிவு, கோடு, வர்ணம், தொனி, மூலமான பரிமானம் இடம், அசைவு, ஒலி, வெளிப்படுத்துவனவாக வாசுகனின் ஓவியங்கள் உள்ளனவா என்பதனை அவரிடமே கேட்போம்!


கேள்வி :- நவீன ஓவியத்தில் எத்தனை வயதில் இருந்து ஈடுபட்டு வருகின்றீர்கள், இக்கலையின் ஈடுபாட்டால் ஏற்பட்ட அனுபவங்களையும் செல்லும் இலக்குகள் பற்றியும் கூறுங்கள்?

பதில் : - நான் பிறந்ததும் கிடந்த கட்டில் உறையில் என்னுடைய உடல், கை , கால், அடையாளங்கள் பதிந்திருக்கும். அதை எனது முதலாவது ஓவியமெனக் கருதுகின்றேன். பிற்காலங்களில் பல வர்ணங்களுடன் கை விரல்களாலும், கால்த்தடங்களாலும் ஓவியங்கள் படைத்திருக்கின்றேன். மகாஜனாக் கல்லூரியில் ஆறாம் ஆண்டு கற்கும் பொழுது ஒருதடவை ஓவிய ஆசிரியர் தியாகராஜா அவர்கள் நாம் விரும்பிய ஒன்றை ஓவியமாக வரையும்படி பணித்திருந்தார். நான் அன்று உருவமற்ற ஒரு சித்திரத்தை வர்ணங்களுடன் தீட்டி அவருடைய பாராட்டைப் பெற்றேன். இவ்வாறு சிறிதுசிறிதாக ஆரம்பித்ததுதான் என்னுடைய படைப்புகளின் பயணம். நான் அப்போதெல்லாம் ஊகித்திருக்கவில்லை நானொரு ஓவியனாக மாறுவேன் என்று. நான் கற்பதற்கு இன்னும் பல உண்டு! இப்புதிய உலகில் அனுபவங்களும் தேடல்களும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. சிறுவயதில் அளவெட்டியில் வாழ்ந்த காலங்களில் எனது தாயாரின் தந்தை (சேமன் கந்தையா) அவர்களை நாம் அப்பு என்று அழைப்போம். அவரிடம் மரங்களைப் பற்றியும், வீட்டுப் பிராணிகள் பற்றியும் அறிந்து கொண்டேன் அவர்களுடன் வாழ்ந்ததும் ஒரு அனுபவமே! நெல்வயல், தென்னைத் தோட்டங்கள், பனைக்காணி, மிருகங்கள், பறவைகள் என்று இயற்கையின் படைப்புக்கு அளவே இல்லை. ஒவ்வொரு தடவைகள் ஆடு குட்டி போடும்போதும் அதை முதலில்த் தொடவேண்டும் தூக்கவேண்டும் என்று ஆசை. இப்போது ஆட்டைப் பார்ப்பதற்கே மிருகக்காட்சிச் சாலைக்குப் போகவேண்டி உள்ளது. எனது அப்பாவுடன் (வே.பூபாலசிங்கம்) அவருடைய வேலைத் தளங்களுக்குப் போனபோது வீதி அபிவிருத்தி அதிகாரசபை- புத்தூர், 1990க்கு முற்பட்ட காலங்களில் செற்சிறிபாய, பத்தரமுல்ல, நடமலை 1990-1995 இடைப்பட்ட காலங்களில் அங்கு பார்த்த வீதி வேலை செய்வதற்கான இயந்திர தளபாடங்கள் ஒரு இயந்திர மனிதனைப்போல காட்சி அழித்தன. அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இவையாவும் நவீனதோர் உலகம். எத்தனையோ றோபோட் படங்கள் பார்த்திருந்தாலும் அவற்றை நேரில்ப் பார்க்க முடியாது. அவற்றை நான் இயந்திரங்களில்க் காண்கின்றேன்! ஆனாலும் தற்போதைய எனது படைப்புக்களில் மனிதனால்ப் படைக்கப் பட்டவற்றை வரைவது அரிதாகிவிட்டது. கொழும்பில் வாழ்ந்த காலங்களில் புதிய மொழி, இனம், மதம், கலாச்சாரம் இவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓவியங்களில் ஒரு நாட்டம். அதே வேளையில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் சித்திர ஆசிரியர்களான திரு.தயாபரம், லலித்தா நடராஜா ஆகியோரிடம் பயின்ற காலங்கள் புதிய உத்திகளை கற்கக்கூடிய வாய்ப்பும் அறியக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. சைப்ரசில் உயர் கல்வி கற்ற காலங்களில் மீண்டும் புதிய மொழி, இனம், மதம், கலாச்சாரம் கலைக்குப் பிரசித்தி பெற்றவர்களில் கிரேக்கர்களும் முக்கியமானவர்கள். அவர்களின் வாழ்க்கை முறையும் எனக்கொரு புதிய அனுபவம்! முதல் முறையாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்த காலம். புதிய நண்பர்கள், புதிய காலநிலை, இயற்கைக் காட்சிகள்யாவும் நல்லதோர் படைப்புகளுக்கு உறுதுணை யாயிற்று. எனது ஓவிய ஆசிரியரான (திரு-கிளின் கியூஸ்) அவர்களுடன் கல்வி கற்ற காலங்கள் பொன்னானவை. பின் அவருடன் அவருடைய ஓவியப் பட்டறையில் வேலை செய்த காலங்கள் புதிய வர்ணங்களைப் பாவிக்கும் முறைகள். அவருடைய ஓவியக் கண்காட்சிகளை ஒழுங்கு செய்யும் முறை, இவ்வாறு அவருடன் வாழ்ந்த காலங்கள் அழியாத ஞாபகங்கள்! பாரிசில் ஒவ்வொரு வருடமும் எனது புதிய கண்காட்சிகளுக்கு சிரமங்களுக்கு மத்தியிலும் வருகை தந்து ஊக்கிவிப்பதிலும் தவறுவதில்லை! அவர் என்னுடன் ஆசிரியராக மட்டுமல்ல நல்லதொரு நண்பனாக, தந்தையாக, முதலாழியாக, பல வழிகளில் என்னை நல்வழிப்படுத்தி உள்ளார். எனது ஆசிரியர்களின், பெற்றோர்களின், நண்பர்களின் அன்பும் நட்பும் எனக்கு என்றும் உண்டு. ஆதலினால் நான் நல்லதோர் இடத்தை எனது ஓவியங்கள் மூலம் சென்றடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதைவிட இலக்கு என்று நான் எதனைக் கூறமுடியும்!

கேள்வி:- தலை கால் புரியாத நவீன ஓவியத்தின் மேல் உங்களுக்குத் துணிச்சலும் ஆர்வமும் ஏற்படக் காரணம் என்ன? இக்கலை ஈடுபாட்டிற்கு உந்து சக்தியாக இருந்தும், இருப்பதற்குமான பின்புலம் பற்றி?

புதில் :- எல்லோரிடமும் ஆழமாகச் சிந்திக்கும் ஆற்றல் உண்டு அது என்னிடத்தில் ஓவியத்தின் மூலம் பிரதிபலிக்கிறது. ஒன்றைப் பார்த்து அவ்வாறே வரைவது கடினமான விடயம். இருந்தும் அச்சட்டத்தைத் தாண்டிச் செல்லமுடியாமல் உள்ளதே என்றொரு கேள்வி என்னிடம் எழுகிறது. நவீன ஓவியங்களில் அவைகள் இல்லாவிடினும் தேடலுக்கான ஒரு வழி உண்டு. அங்கே நவீனமான ஏதோ உள்ளதே தேடவேண்டும் அது மட்டுமல்ல புகைப்படக் கருவியும் வீடியோவும் வந்தபின்பு ஓவியத்திலும் மாற்றம் ஏற்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவைகளுக்கு அப்பால் நான் புதிதாக ஒன்றைச் செய்யவேண்டும் என்றொரு அவா! இவற்றுக்கு உந்து சக்தியாக எனது ஆசிரியரும், நண்பருமான (கிளின் கியுஸ்சையும்) எனது நண்பர்களையும் குறிப்பிடலாம். இவற்றிற்கு அப்பால் நான் ஓரு சில கண்காட்சிகள் செய்தபின் அதன்பின் வந்த கண்காட்சிகளில் எனது நண்பர்கள், ஓவியக் கண்காட்சிக் கூடங்களின் தொடர்புகள் என்னை ஓய்வுபெற விட்டதில்லை!

கேள்வி :- இதுவரை உங்கள் ஓவியங்களை மக்கள் மத்தியில் எந்த நாடுகள்வரை கொண்டு சென்றுள்ளீர்கள்? இதனால்த் தங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள் விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

புதில :- சைப்ரஸ் தலைநகர் நிக்கோசியாவில் மெலினா மெக்கூரி ஓவியக் கூடத்தில் 1997 நவம்பர் மாதம் வெகு சிறப்பாகவும் பெரிதாகவும் ஏற்பாடு செய்ய ப்பட்ட ஓவியக் கண்காட்சியில். எட்டு ஓவியர்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்று எண்பத்தெட்டுக்கும் மேற்பட்ட ஓவியர்களின், பாராட்டையும் பத்திரிகைகளின் பாராட்டையும் பெற்று எனக்கென்றொரு முத்திரையைப் பதித்துள்ளேன். இடமாற்றங்கள் காரணமாக நீண்ட இடைவேளையின் பின் பாரிசில் கைவேலைப் பொருட்கள் உடுப்புகள் விற்கும் கடையுடன் ஓவியக் கூடத்தின் சொந்தக்காரரான அன்னிக் சன்சோனியின் உதவியுடன் 2004 ஏப்ரல் மாதம் எனது இரண்டாவது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பல கண்காட்சிகள் பாரிசிலும் - பாரிஸ் தவிர்ந்த ஏனைய இடங்களிலும் நிகழ்ந்தன. இதன் மூலம் கலைஞர்கள், பெரியோர்கள், பொதுசன சாதனங்களின் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன இவற்றைத்தான் எனக்குக் கிடைத்த விருதாகக் கருதுகின்றேன்! நான் நிச்சயமாக ஃபிரான்சில் விருது பெறுவேன்! ஒரு சில ஆண்டுகளின் பின்னர் கிளினுடன் ஓர் ஓவியக் கண்காட்சியை சைப்ரசில் ஒழுங்கு செய்ய உள்ளேன். அதன் பின் கொழும்பிலும் ஒழுங்கு செய்ய உள்ளேன்.


கேள்வி :- உங்களுடைய ஓவியத்திற்கான வெளிச்சம் வர்ணங்கள் அதிகம் பயன்படுத்தும் பூச்சுக்கள் பொருட்கள் தேர்வு பயன்படுத்தும் உத்திகள் தெரிவுகள் பற்றிய முறைகளைக் கூறுங்கள்?

பதில் :- வெளிச்சம் என்று சொன்னதும் இருட்டின் ஞாபகமே வருகிறது. பள்ளிக் காலங்களில் அம்மா என்னை வேளைக்குப் படுத்து விடிய எழுந்து படி என்று கூறுவா. நான் இரவில் நித்திரை விழித்துப் படித்துப் பழகியதனாலோ இன்றும் அதையே பின்பற்றுகின்றேன். அதிலும் இரவில் எல்லோரும் தூங்கிய பின் ஏற்படும் அமைதி எனக்குப் புதிய சக்தியைக் கொடுக்கின்றது. எனது பல ஓவியங்கள் இரவிலேயே வரைந்துள்ளேன். ஏன் முதலாவது ஓவியக் கண்காட்சி (1997) ஒழுங்குகளை நான் விடிய நான்கு மணிவரைக்கும் கண்விழித்திருந்து செய்து முடித்து கிளினை வியப்பில் ஆழ்த்தினேன். இரவில் உள்ள அமைதியில் என்னுள் தோன்றும் ஆக்கங்கள் என்னையே வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. கோடுகளும் வர்ணங்களின் தெரிவுகளும் என்னை மறந்த ஓர் உலகம். அவ்வாறாக வரைந்த நவீன ஓவியங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க இன்னும் ஓவியம் வரைய உந்துகின்றது. சில வேளைகளில் வர்ணங்களின் தேர்வை இயற்கையை ஒட்டித் தேர்வு செய்கின்றேன். உதாரணமாக மீன்கள், பறவைகள், வண்ணத்துப் பூச்சி. நான் படித்த காலங்களில் ஒத்த வர்ணங்கள் இல்லாவிடினும் அதனுடன் துணை வர்ணங்களாவது சேரவேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. இருந்தும் பல வேளைகளில் எதிர்வர்ணங்களும் புதிய பரிமானத்தை உருவாக்குகின்றன. இதற்கு உதாரணமாக நான் பல தடவைகள் கடல்வாழ் வர்ணமீன்களிலும் வண்ணத்துப் பூச்சிகளிலும் கண்டுள்ளேன். பல ஓவியங்களில் ஒட்டுச் சித்திர முறையைக் கையாண்டுள்ளேன். அவற்றில்ப் பாவிக்கும் பொருட்கள் அவை சார்ந்தனவாகப் பாவிக்க முயற்சி செய்கின்றேன். சில வேளைகளில் என்னை மறந்து அந்தப் பொருட்களை ஒட்டி அவற்றையும் தேவைப்படுபனவாக மாற்றியுள்ளேன். சுனாமி ஓவியத்தில்க் கடற்கரைக் காட்சியில் ஒட்டிய மண் ஃபிரான்சின் வடபகுதி நோமண்டிக்குச் சென்றபோது எடுத்த மண். இரண்டாம் உலக யுத்தத்தில் அழிவு கூட ஏற்பட்ட முக்கிய இடத்தில் அதுவும் நோமண்டித் தரையிறக்கம் சுனாமி போன்று இருந்திருக்குமா? இரண்டையும் நான் நேரில்ப் பார்க்கவில்லை. அதன் அழிவைத் தாங்கக் கூடியவன் ஆகின்றேன்! ஒருமுறை எனது ஓவியக் கண்காட்சியில் வண்ணாத்துப் பூச்சி என்ற ஓவியத்தில் இறந்த வண்ணாத்துப் பூச்சியின் உடல்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதைப் பார்த்த கவிஞர் ஒருவர் என்னிடம் கேட்டார் நீர் ஒரு படைப்பாளி இறந்த வண்ணத்துப் பூச்சியை உபயோகிக்கலாமா என்று. அவருடைய கேள்விக்கு அவருடன் கூட நின்ற ஒருவர் இறந்த வண்ணத்துப் பூச்சிக்கு ஓவியம் மூலம் உயிர் ஊட்டியுள்ளார் என்று உடனே பதிலளித்தார். உத்திகள் என்னும் பொழுது ஒவ்வொரு ஓவியத்திலும் புதிதாகச் செய்ய வேண்டும், புதிய உத்திகளைக் கையாளவேண்டும் என்று எண்ணுவேன். இருப்பினும் முக்கியமாக நேர்த்தியான கோடுகளை வரைவதில் முக்கிய கவனம் செலுத்துகின்றேன். ஒவ்வொரு புதிய ஓவியக் கண்காட்சித் திறப்பு விழாக்களில் சிற்றுரையாற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைப்பதில் முக்கிய நபரான ஓவியர் - கவிஞர் அப்பாத்துரை அவர்கள் கூறியதாவது! எனது பல ஓவியங்களில் வெற்றிடத்தையோ அல்லது வெள்ளை நிறத்தையோ காணக்கூடியதாக உள்ளது. அதுவே எனது கை அடையாளங்களைக் காட்டக்கூடிய ஓவியங்கள் எனக்கூறலாம் என்று இனம் காட்டினார்!

கேள்வி :- இப்போது கலைக்கூடம் நிறுவிக் கற்பிக்கும் முறையிலும் விளங்குகிறீர்கள்! கற்பிக்கும் முறைக்கு எவ்வகையான உத்திகளைக் கையாள்கின்றீர்கள்? அந்தளவுக்கு ஓவியக் கற்கை நெறிக்கும் கற்பிக்கும் நிலைக்கும் ஏற்பட்டுள்ள அனுபவத்தைக் கூறுங்கள்?

பதில் :- சிறார்கள் சித்திரம் வரையும்போது பாவிக்கும் வர்ணங்களில் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு. வேறு பிளைகள் இருப்பின் அவர்களை ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று விநாவுவேன். இவ்வாறு என்னை படிப்படியாக ஒரு சிறிய ஓவிய ஆசிரியராக்கி விட்டது. சித்திரத்தில் நாட்டமுள்ள எட்டு மாணவர்களுடன் நானுமொரு மாணவனாக அவர்களுடன் சனி, ஞாயிறு தினங்களைக் கழிப்பது சிரமம். ஒரு புறம் புதிய பரிமா ணங்கள் பல, எனக்குத் தெரிந்த நான் படித்த சகலவற்றையும் தேவையான இடங்களில் அவர்களுக்குக் கற்பித்து வருகின்றேன். அவர்களுடன் இருபது மாதங்கள் தாண்டி விட்டன. சென்ற மாதம் அவர்களின் படைப்புக்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து ஒரு கண்காட்சியையும் நடத்தினேன். அவர்களுக்கு அது ஒரு பெரிய அடிக்கல்லாக அமைந்தது. முக்கியமாகப் பல விடயங்கள் என்னை மீள் பயிற்சிக்கு உள்ளாக்குகின்றது. வர்ணங்களின் தேர்வு அவர்களிடமிருந்து சிலவற்றைக் கற்கக் கூடியதாக உள்ளது. நவீன ஓவியத்திற்கு எனது மாணவர்களுடன் பழகிய காலங்களும், அவர்களின் நட்பும்- ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர், நால்வர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், மூவர் இலங்கை மாணவர்கள். அவர்களின் வேறுபாடுகள் பல அவர்களின் சித்திரத்தில்க் காணக் கூடியதாக உள்ளது. ஒரு எகிப்துத் தாயாரை எட்டுப்பேரும் வரைந்தால் எட்டு விடை கிடை க்கும். எட்டுக் கேள்வி உருவாகும். என்னிடம் அவர்கள் நன்றாகப் பல விடையங்களைக் கற்றதாகவே கருதுகின்றேன். இன்னும் மாணவர்களைச் சேர்ப்பதிலும்… அவர்கள் எட்டுப் பேரும் பலருக்குச் சமமாக இருப்பதாலே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது!

கேள்வி :- கருத்து ரீதியாக நவீன ஓவியம் பத்துப் - பதினைந்து - இருபது கோடுகளை ஒரு சில நிமிடத்தில்ப் போடுவது போன்று இலகுவாக வாசகர்கள் நினைக்கின்றார்களே! அக்கருத்து உண்மையானதா?

பதில் :- நவீனம் என்ற சொல் எழும்போது கருத்தும் கேள்வியும் சேர்ந்தே உருவாகி விடுகிறது. அங்கேதான் வாசகர்களைத் தேடல்களுக்கு உள்ளாக்குகின்றது. அது கலைஞனுக்கு மகிழ்ச்சியையும் நட்பையும் உருவாக்குகின்றது. எதையும் நாம் இலகுவில் எடைபோட முடியாது. இலகுவான கலைப்படைப்பாக இருந்தாலும் அங்கே ஆழம் அதிகமாகவே இருக்கும். மகிழ்ச்சியும் கூடவே இருக்கிறது. எவரும் எதையும் செய்யலாம். தேடல், பயிற்சி, இருத்தல், இவை போன்றன முக்கியமானவை. அவர்களுடனே இருக்குமாயின் இதில் எது ஒன்று குறைந்தாலும் படைப்புக்கள் கடினமாகிவிடும். இவை எல்லாவற்றிலும் நட்பு மிக முக்கியமானது!

கேள்வி :- நீங்கள் தத்ரூபமாக வரைந்து உங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் தன்மையுடையனவாகத் துலங்கும் ஓவியங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு காரணம் இருக்கும். அந்தவகையில் உங்கள் ஓவியங்களின் சுவை, நெகிழ்வைப் பற்றிக் கூறுங்கள்?

பதில் :- ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பிள்ளையைப் பெற்றெடுப்பது போன்ற நினைவு உருவாகிறது. முதல் நேர்த்தியான கோடுகளைக் கொண்டு வரும்வரை முயற்சிப்பேன். பலவகை ஒரு தடவையில் வந்துவிடும். சில வேளைகளில் மீண்டும் அழித்துக் கீறவேண்டி ஏற்பட்டும் உள்ளது. அதன்பின் நான் நினைத்தது அல்லது கனவு கண்டதுபோல் வர்ணங்களுடன் பூர்த்தி செய்வேன். அதையும் தாண்டி ஒட்டுச் சித்திர முறை கை யாழுவேன். இவை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சொல்லிற்கு நான் உடன்பட மாட்டேன். சட்டத்தைத் தாண்டியும் ஓவியம் செல்லலாம். இவற்றின் தாக்கங்கள் என்னுள் இயற்கை, நடப்பு, அழிவுகள், கோபம், பயணங்கள், போன்ற இன்னும் பல விடையங்களினால்க் கருவுற்று அவை ஓவியமாகிறது. ஒரு திறப்பு விழாவில்க் கிளின் கூறியிருந்தார் பல ஓவியங்கள் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக இருப்பாரின் அதன் விழைவாக ஓவியம் வரைவதாகவும், ஆனால் வாசுகன் தான் வரையவேண்டும் என்று எண்ணுவதற்கு அடிமையாகி விட்டான். எந்த நேரத்திலும் அவன் கீறவேண்டும் என்று எண்ணி உடனே வரைந்து முடிக்கின்றான்.

கேள்வி :- பாரிசில் 2007 கார்த்திகை மாதம் 24ம் திகதி வரையும் ஓவியக் கண்காட்சி நடத்துகின்றீர்கள் இக்கண்காட்சியில் ஏற்கெனவே வரைந்த ஓவியங்களுடன் புதிய ஓவியங்களும் இடம்பெற்றுள்ளனவா?

பதில் :- நான் உருவாக்கும் புதிய கண்காட்சிகளில் ஏற்கெனவே காட்சிப்படித்திய ஓவியங்களை மீண்டும் காட்சிப்படுத்துவதில்லை. ஒரு புதிய அல்லது அந்த ஆண்டிற்கான படைப்புகள் முறையே அழகாக ஒழுங்கு செய்து திறப்பு விழாவிற்கு எல்லோரையும் அழைத்து மகிழ்ச்சியாக முடிந்ததும். அப்படைப்புகளில் சிலவற்றை வேறு சில காட்சிகள், வேறு கலைக்கூடங்கள், போன்றவற்றில்க் காட்சிப் படுத்துவேன். உதாரணமாக 24 கார்த்திகை 2007ல் இந்த ஆண்டிற்கான புதிய ஓவியக்கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பதினைந்திற்கும் மேற்பட்ட புதிய படைப்புகள் இருக்கின்றன. மீண்டும் 2008ம் ஆண்டிற்கான புதிய கண்காட்சியில் இதுரை காட்சிப்படுத்தப் படாத படைப்புக்கள் வரும்! அவை 2008க்கும் இடைப்பட்ட காலங்களில் வரைந்தவையாக இருக்கலாம். நான் வளர்ந்து வரும் ஓவியன்! பார்வையாளர்கள் என்னிடம் புதியதையே எதிர்பார்க்கின்றார்கள். அது மட்டுமல்ல காட்சிப்படுத்தியவற்றை மீண்டும் காட்சிப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்கும் மேலாக எனது ஓவிய வளர்ச்சி ஒவ்வொரு ஓவியக் கண்காட்சியிலும் வளர்ந்து கொண்டே போவதாகப் பார்வையாளர்கள் கூறியுள்ளார்கள். சென்ற வருடக் கண்காட்சியில்க் குறிப்புப் புத்தகத்தில்ப் பார்வையாளர்கள் ஒன்பது மொழிகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தார்கள். ஒவ்வொருவரின் கருத்துக்கள் வாழ்த்துக்கள் சொல்லில் அடங்காதவை. புதிய படைப்புக்களுடன் வரும் ஓவியக் கண்காட்சிக்கு ஒரு தலைப்புக் கொடுப்பேன். அதேபோன்று ஒவ்வொரு ஓவியத்திற்கும் தலைப்புக் கொடுப்பதிலும் மிகக்கவனம் செலுத்தி வருகின்றேன். பொதுவாக அழைப்பிதழில்ப் பதிவு செய்யும் ஓவியத்தின் பெயரையே அந்த ஓவியக் கண்காட்சிக்கும் பெயரிடுவேன்.

நேர்காணல் : கவிஞர் - மா.கி.கிறிஸ்ரியன்.


Article by M.K.Kristian

THINAKKURAL weekly news paper

2009.01.04