VP. Vasuhan

'ஒவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்' - மணிமேகலை
2019 கோடை ஓவியர் வி.பி.  வாசுகன் வெளிப்படுத்திய

பாரிசில் ஒரு தமிழ் ஓவியக் காட்சி

சலனம் முகுந்தன்

விலங்கு நிலையிலிருந்ததனது முன்னங் கால்களை தனித்துவப் பயன்பாடாய் கைகளாக்கி தமக்கான தேவைகளை இலகுவாகப் பெற்ற பெருமைப் பரிணாமம் உடையது 'மனித குலம் ', படிமுறை படிமுறையாய் தொடர்ந்த இந்த பயன்பாடுகள் கைகளையும் அதிலுள்ள விரல்களையும் கொண்டு பாரிய செயற்தளத்தில் பயணிக்கும் புதிய வாழ்வில் மனித சமுதாயத்திற்கு பெற்றுத் தந்திருக்கிறது.

' மனித இயல்பு ' HUMAN NATURE 


புவியரின் வெப்பம் அதிகரித்துச் செல்லும் வாழ்வை அனுபவித்தவாறு இந்த ஆண்டு கோடையும் ' இசைத் திருவிழாக் (fête de la musique) கோலாகலங்களுடன் பாரீசில் வரவேற்கப்பட்டது.  இந்த வேளையில் தொடர்ச்சியான ஓவியப் பயணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புலம் பெயர் - அடுத்த தலைமுறை கலையாளர் வி.பி. வாசுகன் தனது 'ஒவியக் காட்சியகத்தை' அமைத்திருந்தார், இதற்கு அவர் இட்ட பெயர் 'மனித இயல்பு' (Human Nature).  2019 யூன் 22 - 30 வரையில் இந்தக் காட்சிக்கூடம் நடைபெற்றது. (1)


மாநகரான பாரீசின் கிழக்கே இயற்கை வனமாகப் பேணப்படும் வன்சன் (Vincennes) காட்டிற்கு அண்மையிலுள்ள புறநகரம் மொந்ரோய் (Montreuil).  இந்த நகரில்தான் சினிமாவைத் தந்த லூமியர் சகோதரர்கள் தமது கடைசிக் காலத்தில் வாழ்ந்திருந்தார்கள்.  மொந்திரோய் நகரில் அமையப்பெற்ற 'கலை இடத்தின் படிகள்’ (l'escalier - espace d ' art) எனும் கூடத்தில் இந்த ஓவியக் கண்காட்சி அமைந்திருந்தது. 


23 யூன் ஞாயிறு மாலை கண்காட்சியைக் காண மொந்திரோய் பயணமானேன்.  கலைக் கூடம் அமைந்த தெரு பழமையும் புதுமையும் கொண்ட நெருக்கமான வீடுகள் அமைந்ததாய் இருந்தது.  உரிய இடம் உயரமான தகர வேலியின் மேலே முட்கம்பி தடுப்பும் கொண்ட முகாமாக ஆச்சரியமூட்டியது.  ஆனால் வாசலில் காவலாளி இல்லாமையும் தகரத் தட்டியில் ஒட்டப்பட்டிருந்த பென்னாம்பெரிய ஓவியப் பதாகையும் (2) சரியான முகவரிக்கே வந்துள்ளதை உறுதி செய்தது.  இருப்பினும் தயக்கத்துடன் உள் நுழைந்தேன்.  பல விதமான பழைய சைக்கிள் தொங்கிக் கொண்டிருந்த (3) அந்த சிறு வளாகம் ஒரு தொழிற்சாலை போல் காட்சியளிக்க மலைத்துப் போனேன்.  நிதானித்து அங்கு பார்த்தபோது மரத்திலான பல பழமை வாய்ந்த சிறு வீட்டுத் தொகுதி இருப்பதை உணர முடிந்தது.  வலது பக்க ஒரு வீட்டு முன்றலில் பெரிய உருவ பிரஞ்சு இளைஞன் தனது சைக்கிளைத் திருத்திக் கொண்டிருந்தான்.  என்னையும் எனது முகத்தையும் கண்ட அந்த வாலிபன் அகமலர்ச்சியுடன் "வணக்கம் ! - ஓவியக் கண்காட்சி பார்க்க வந்திருக்கிறீர்களா?” என வரவேற்று அழைத்த இதம் இந்த வரிகளை எழுதும்போதும் எனது மனதில் உவகையூட்டுகிறது.  "ஆமாம் !” என்கிறேன்.  "சரி ! - இந்தப் படிகளால் மேலே செல்லுங்கள் !” என அவரது வலப்பக்கமிருந்த மரப் படிக்கட்டுகளைக் காட்டினார்.  மலர்வான ' நன்றி ' யைத்தெரிவித்து படிக்கட்டு வழியாக மேலே ஏறினேன்.


மென் இசை பரவ அந்த சிறிய ஓவியக் கூடம் நேர்த்தியாக வைக்கப்பட்ட ஓவியங்களால் வரவேற்றத.  தனக்குக் கிடைத்த பல்வேறு பொருட்களின் தகுநல் இணைப்புகளால் 'உரு' வகமாகிய ஓவியங்கள் மற்றும் ஆங்காங்கே புவிப் பயணத்தில் சிதறுண்ட மரத் துண்டங்கள், தும்பு, துணி, கயிறு போன்ற பல  சிதிலங்களிலிருந்து 'உரு' வகிக்கப்பட்ட பிம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. பலவற்றிலும் முகங்கள் தனியாகப் பளீரிட்டன.  இந்த பலதரப்பட்ட முகங்களின் விதவிதமான விழிகள் - ஓவியத்தைப் படைக்கும் - காணும் மனிதக் கண்களில் பிரதானமானது கருவிழி தானே! அக்கருவிழியில்லா முகங்களும் அங்கிருந்தன.  ஒவியங்கள் சிற்பங்கள் என்பன கலை மனம் கூறவிழையும் சிருட்டிப்பு வடிவங்கள்.  கலை என்பது பிரதியிடுதல் அல்ல.  கலையானது வாழ்வனுபவக் கற்பனைகளுடன் பிறப்பாகும் ஓர் உருவேற்றல் : சிருட்டித்தல் - தெளிவாகக் கூறுவதானால் படைத்தல்.  இன்று 'உரு' வாகக்ட்டப்படும் கடவுள்களையே இந்தக் கலையாளுமையார்கள்தானே படைத்திருக்கிறார்கள். 


அந்த மாடத்தின் உள் அறையொன்றிலிருந்த திரைச் சீலையை விலத்தியவாறு ஒரு முதியவர் மலர்வுடன் வரவேற்கிறார்.  அந்தச் சூழல் என்னை நிதானிக்க வைக்கிறது.  சதா விரட்டப்பட்டவர்களாய் ஓடிக் கொண்டே இருக்கும் நகர வாழ்வில் அவ்வப்போது கிடைக்கும் இத்தகைய நிதானத்தருணங்கள் மகத்தானவை.  ஒவ்வோரு படங்களாய்பார்க் கிறேன்.  அங்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் உட்காந்திருந்து நோக்கினேன்.  ஓவியர் பகிர விழையும் மொழியை வாசிக்க மனம் ஆழ்கிறது.

 

பிரான்சுத் தமிழ்ப் புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தொடர்ந்து செயற்பட்டு வரும் ஓவியப்பயணத்தில் வி.பி. வாசுகன் தனக்கான ஓர் ஓவியத்தடத்தை பதிவு செய்கிறார். இந்தப் பிரான்சு வாழ் புலத்தில் பத்து வருடங்களின் முன்பு நடைபெற்ற தமிழ் ஓவியக் காட்சியகத்தில் சாம்சன், தயா, ராச்குமாரி மற்றும் வாசுகன் பங்கேற்றிருந்தனர்(4). இந்தியாவிலிருந்து வருகை தந்த கவிஞர் இந்திரன் இந்தியா வாழ் பல தமிழ் ஓவியர்களது கண்காட்சி நிகழ்வொன்றை நடாத்தியிருக்கிறார். தமிழரது தொன்மப்பிம்பங்களுக்கு 'உரு' க்கொடுக்கும் தமிழ் அடையாள ஓவியரும் இயங்கு படக்கலைஞரும்   டிராட்ஸ்கி மருது அவர்களது சிறப்பான ஓவியக் கண்காட்சி 2016 தமிழர் திருநாள் நிகழ்வில் பாரீசு 20 நகரசபை வளாகத்தில் நடைபெற்றது.  நம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரெஞ்சு மொழிப்புலமையாளரும் எழுத்தாரும் கவிஞருமான வாசுதேவன் தனது ஓவியங்களைத் திரட்டிக்காட்சிப்படுத்தியிருக்கிறார்.  தற்போது இளம் ஓவியராக கீர்த்திகா ஸ் - ரீபன் தீவிரமாகச்செயற்படுகிறார். இங்கு வாழும் கலைஞர் சாம்சனின் ஓவியக் கரிசனை முறைமைப்படுத்தப்படல் வேண்டும். கலைகளில் பல தளங்களில் ஈடுபடும் கவிஞர் பாலகணேசன் (சுபாஸ்) சிற்பக் லையில் தன்னார்வத்தோடு முன்னெடுக்கப் படும் செயற்பாடுகள் பதிவாகவேண்டும். கனடாத் தமிழ்ப்புலப்பெயர்வு வாழ்வில் ஓவியத் தடம் பதித்து மறைந்த ஓவியர் கருணா வின்சென்ட்  நினைவலைகளில் சிமிட்டுகிறார். 

தொன்மமும் தொடர்ச்சியும் நீட்சியுமான ' தமிழ் ' - ' தமிழர் வாழ்வு ' பற்றி அதிகமாகப் பேசும் இன்றைய காலத்தில் நாமிருக்கிறோம் . மனிதர்களது தோற்றத்தின் ஆதிகாலத்திலிருந்து தொடர்ந்து பதிவாகும் கலைகளில் ஓவியம் பிரதானமானது.  கட்புலனில் தெரியாத மனித மனங்களது எண்ணங்களை கட்புல தரிசனமாக்கும் உன்னதக் கலை ஓவியக் கலை என்பார்கள். இத்தகைய கலையை தமிழ் பேசும் உலகு தகுந்த கவனத்தில் கொண்டிருக்கிறதா? - உலகம் தழுவிய தமிழ் தனவந்தர்கள் மற்றும் பெரும் தொழில் முனைவோரது இல்லங்கள், நிறுவனங்களில் நம்மவர் ஓவியங்கள் பெரு மதிப்புக்குரியவை ஆகவேண்டும். 


கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பத்தாவது ஆண்டு நினைவேந்திய 'முள்ளிவாய்க்கால் கஞ்சி'  வழங்கப்பட்டதாக இந்நிகழ்வில் விருப்புடன் கலந்து கொண்ட மறைந்த கவிஞர் கி.பி. அரவிந்தன் துணைவி சுமதியும் அவரது மகள் மானினியும் தெரிவித்தனர்.  நம்மவர்களது கலைகளையும் எழுத்துகளையும் கலைஞர்களையும் மதித்து வாழும் கவிஞர் நாகேஸ் வழமை போல் முதல் வருகையாளராக வந்திருந்து சிறப்பித்தார்.


 பாரீஸ் வந்திருந்த படைப்பாளி குணா கவியழகன் இக்காட்சியைக்காண தனது செயற்கைக் காலுடன் படிகளேறி வந்திருந்திருந்ததை நெகிழ்வுடன் வரவேற்று மகிழ்ந்தார் ஓவியர் வாசுகன்.  கலைகளையும் கலைஞர்களையும் மதித்து ஊக்கமளிக்கும் கரிசனையாளனாக குணா கவியழகன் எனக்குத் தென்பட்டார். 


இந்தக் கலைக்கூடத்தின் பொறுப்பாளர் குஸ்தாவோ ( Gustavo ) அவர்கள் அங்கு வருகை தந்த பல்லினத்தவர்களுடன் கைகுலுக்கி வரவேற்றமை கவனம் கொள்ள வைத்தது.  அங்கு வருகை தந்தோர் பற்றி தனது பொதுமைக்கருத்தாக 'தமிழர்கள் இரசனையுடைய மென்மையானவர்கள்!'  எனக் குறிப்பிட்டது சிலிர்ப்புற வைத்தது.


பாரீஸ் புலம்பெயர் எழுத்தாளர் க. கலாமோகன் இந்த நிகழ்வு தொடர்பான தனது பதிவிலிருக்கும் வாக்கியங்களை அப்படியே இணைக்கிறேன். (5)


< கீறல் வித்தையில் ஓர் நவீனத்தையும்,  இன நவீனத்தையும் பிணைவதில் இவரது ஓவிய இலக்கு உள்ளதென்று நான் கருதுகின்றேன்.  இந்த இணைப்பில் தமிழர் கலாசாரக் கோலங்கள் அழகிய பதிவாக உள்ளன. வாசுகனின் தூரிகையினது வரைபு வேறு கலாசாரங்களையும் கவ்வுகின்றன.  சில ஓவியங்களில் ஜப்பானிய முகங்கள் எமது விழிகளின் முன்னே.


 ஓவியரிடம் "சில படங்கள் எடுக்கலாமா?" எனக் கேட்டேன். "தாராளமாக" எனப் பதில் வந்தது.  எடுத்த படங்களை, நான் வீடு திரும்பி வரும்போது எனது ஆபிரிக்க நண்பிக்கு அனுப்பினேன். சில நிமிடங்களில் பதில் வந்தது.


"உங்களது நண்பரது ஓவியங்கள் ரசனைக்கு உரியதாக உள்ளன.  இவைகளை ஆபிரிக்க ஓவியங்கள் எனலாம் என எனக்குப் படுகின்றது."


இந்தப்பதில் வாசுகனின் ஓவியங்கள்  எங்கும் போகும் என்பதை உணர்த்துகின்றன.  இதுதான் இவரது தூரிகை உலகத்துவத்தை - நோக்கி நடந்து கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. > 

Articl by 'Slanam' Mukunthan
"Kaakkaicirakinile"
(International Journal of Monthly Literature)
issued - Aug 2019

 

Related Links :

1.) Invitation of the exhibition 

2.) Poster of the exhibition. 

 

3.) Outside the gallery with bicycle

4.) Eelaththerippukkal exhibition 2007 organized Marie de la courneuve, R. Anotony and V.P.Vasuhan

5.) Article by Kalamokan (  எழுத்தாளர் க. கலாமோகன் பதிவிலிருந்து )