VP. Vasuhan


வாசுகன்: விழிகளுக்கு விருப்பமான சித்திரங்கள்
தாயகம் இணையத் தளம் - June 2019
க.கலாமோகன்

ஓவிய வாசிப்புகள் எமக்குள் இனிமையையும், பல சிந்தனைகளையும் தருவன. எனது வாழ்வின்  பல நேரங்கள் இவைகளைத் தரிசிப்பதில் சுவைகளை அடைகின்றது, சிந்திப்பு வயல்களில் என்னைத் தள்ளுகின்றது. ஓர் வித்தியாசமான எழுத்தே ஓவியம். கீறல்களில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் அனைத்துமே உள்ளன.


29/06/2019 இல் வாசுகனது ஓவியக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றேன். நேரடிச் சந்திப்புகள் அதிகமாக இல்லாது இருப்பினும்  எனக்குப் பல காலங்களாக இவரைத் தெரியும். இவரது தொடக்க ஓவியங்களை பாரிசுக்கு அப்புறம் உள்ள பகுதியில் பார்த்துள்ளேன். ஓவிய விருப்பில் நிறைய நேரங்களைச் செலவிடுபவர். அமைதியான முகம். பலருக்கும் சந்தோசம் செய்யும் புன்சிரிப்பு. உலகின் கலைகளைத் தேடுவதில் மிகவும் விருப்பானவராக இருப்பினும், இசையின் கலைஞராகவும் இவர் உள்ளார்.


தமிழ் உலகில் நிறைய ஓவிஞர்கள் எமது விழிகளுக்கு நிறைய வாசிப்புகளைத் தருவது போல வாசுகனும் தனது கீறல் உலகில் எமது விழிகளுக்குக் காட்டும் வித்தைகள்  கரிசனைக்குரியன. இவரது அனைத்து ஓவியங்களிலும் கருத்து நிலைகள் புதைக்கப்பட்டுள்ளன என்றே நான் கருதுகின்றேன். பல வாசிப்புகளுக்கு வழிகளைத் திறப்பன இவரது  ஓவியங்கள். அனைத்துக் கீறல்களையும் அமைதியாகப் பார்த்துவிட்டு அவைகளின் முன்னே இருந்தேன். இவைகள் மீதான மீள் ரசனைக்குள் மௌனமாக என்னைப் புகுத்துவது சுகமாக இருந்தது. 


இவரது தூரிகையின் உழைப்புக்கு பலரது விழிகளும் பல விளக்கங்களைத் தேடலாம். ஓர் மறைமுக யதார்த்தத்துக்குள் தோய்ந்து எமது விழிகளுக்கு முன்னால் செய்திகளை வைப்பதுதான் வாசுகனின் ஓவிய நோக்கு என நினைக்கின்றேன். இந்த மறைமுக வாசிப்பு நிலைகள் உலகின் புகலிடப் படைப்பாளர்கள் சிலரிடம் இருந்துள்ளது. இது தாம் பிரிந்த தாய் நிலங்களின் வன்முறை இருப்பைக் காரணமாகக் கொள்ளலாம்.

கீறல் வித்தையில் ஓர் நவீனத்தையும், இன நவீனத்தையும் பிணைவதில் இவரது ஓவிய இலக்கு உள்ளதென்று நான் கருதுகின்றேன்.  இந்த இணைப்பில் தமிழர் கலாசாரக் கோலங்கள் அழகிய பதிவாக உள்ளன. வாசுகனின் தூரிகையினது வரைபு வேறு கலாசாரங்களையும் கவ்வுகின்றன. சில ஓவியங்களில் ஜப்பானிய முகங்கள் எமது விழிகளின் முன்னே.


ஓவியரிடம் “சில படங்கள் எடுக்கலாமா?” எனக் கேட்டேன். “தாராளமாக…” எனப் பதில் வந்தது. எடுத்த படங்களை, நான் வீடு திரும்பி வரும்போது எனது ஆபிரிக்க நண்பிக்கு அனுப்பினேன். சில நிமிடங்களில் பதில் வந்தது.


“உங்களது நண்பரது ஓவியங்கள் ரசனைக்கு உரியதாக உள்ளன. இவைகளை ஆபிரிக்க ஓவியங்கள் எனலாம் என எனக்குப் படுகின்றது.”


இந்தப் பதில் வாசுகனின் ஓவியங்கள் எங்கும் போகும் என்பதை உணர்த்துகின்றன. இதுதான் இவரது தூரிகை உலகத்துவத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. 


2019, ↑ Thayagam - online web 

http://www.thayagam.com/vasuhan/

article by K . Kalamogan