"காமதேனு - ஒக்ஸ்" (Kamathenu-Ox) எனும் தலைப்பில் 2006ம் ஆண்டு பரிசில் நிகழ்ந்த வாசுகனின் ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பரிசில் - நவீன ஓவிய புரட்சியில் பங்காற்றிய, முக்கிய ஓவியர்கள் அலைந்து திரிந்த இடங்களில் ஒன்றான "கால்வாய் செந்மார்த்தான்" (Canal st Martin) அருகில் அமைந்திருந்தது அந்த ஓவிய கண்காட்சி அரங்கம் (Bayadère). சூடான வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பெரும்பான்மையான ஓவியங்கள் பல கதைகள் பேசின. சைபிறஸில்(Cyprus) இருந்து அவரின் ஓவிய ஆசிரியர் கிளின் (Glyn HUGHES), இலங்கையில் இருந்து தந்தை வாசுகனின் ஓவிய மாணவர்கள் மற்றும் இலக்கிய கலை ஆவலர்களும் நண்பர்களையும் அங்கு வந்திருந்தனர் .
அன்று பார்த்த அதே ஊக்கமும் ஆர்வமும் 10 மே 2020 ல், "முகநூல் - நேரலை" ஓவியக் கண்காட்சியிலும் உணரமுடிந்தது. "Think about Painting" என்ற தலைப்பில் நிகழ்ந்த நேரலை காண்பிய நிகழ்வு ஒரு புதிய பரிச்சாத்த முயற்சியே!. அதில் ஓவியர் வெற்றியும் கண்டுள்ளார். கோவிட் 19 - உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் அபாய முடக்க காலத்தில், நவீன பரிச்சார்த்த முயற்சில் "முகநூல் - நேரலை" ஓவிய காண்பிய நிகழ்வு பாராட்டத்தக்கது. ஓவியர் நேர்த்தியாகதன் ஓவியங்களை நேரலையில் விளக்கியது, சிறப்பாகவும் மேலும் தேடலை ஏற்படுத்தியது. ஓவியங்கள், பயணங்களையும் இயற்கையையும் பாரம்பரியங்களையும் வலிகளையும் நடைமுறையையும் பேசுகின்றன. வாசுகனின் நீண்ட கலைப்பயணத்தில், சமகால ஓவியங்கள் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறது. சென் நதியில் மிதந்துவந்த மரத்துண்டுகளின் தெரிவில் உருவாக்கிய சிற்ப வேலைப்பாடுகள் அவரின் படைப்பின் புதிய பரிமாணம்.
இச் "சமூகவலைத்தள நேரலை" ஓவிய காண்பிய நிகழ்வு மற்றய ஓவியர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும்.
12.05.2020 Germany
- ரஞ்சினி ராசம்மா