VP. Vasuhan

எழுத்தோவியக் கலைக்கூடத்தில் சிறார்களுடன் ( அச்சன், ரக்சனா, நதியான் ) விபி. வாசுகன் பிரான்ஸ் 28.10.2021 Tamil Calligraphy

Tamil Calligraphy

தமிழ் எழுத்தோவியப் (எழுத்தணிக்கலை) படைப்பு

பிரான்ஸ் புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் ஓர் இயங்கு நிலை ஓவியராகத் தொடர்பவர் வி. பி. வாசுகன். சென்ற 2021 ஒக்ரோபர் 28ல் பாரீசின் கிழக்கே உள்ள மொந்துரோய்(Montreuil) நகரிலுள்ள கலை அரங்கில் தமிழ் எழுத்தோவிய (எழுத்தணிக்கலை) நிகழ்த்துகை அரங்காக பல்தேசியப் பார்வையாளர்களுக்கு மத்தியில் சுமார் இருபத்தைந்து நிமிட நேரத்தில் நிகழ்த்தினார். 

ஆதி மனிதர்களது சிந்தனைப் பகிர்வுகளின் வரிவடிவ நீட்சியாகவே மொழிகளின் எழுத்துரு உருவானதாக மானிடவியலாளர்கள் கூறுவார்கள். அப்படியாக வந்த உருக்களின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சிதான் எழுத்துகளாக தற்போது நாம் பயன்படுத்தி  வருபவை.தொன்மமும் தொடர்ச்சியும் நீட்சியுமாகப் பயணிக்கும் தமிழின் உயிர் எழுத்துகளையும் ஆயுத எழுத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு சுவரோவிக் காட்சி நிகழ்த்துகையாக்கினார் துடிப்பான ஓவியர் வாசுகன். சிறாருடன் இருந்த அரங்கு குண்டூசி வீழ்ந்தால் ஓசை எழும் வகையில் அமையுடன் உற்று நோக்கிவாறிருந்தது. ஓவியர் அங்குமிங்குமாக விறுவிறுவென நடமாடும் போது மிதிபட்டு நசுங்கிய முட்டைக் கோதுகளின் ஒலி இயற்கையாக இருந்தது. கரி மஞ்சள் கிழங்கு  ஃபிறைஸ்(fraise) பழம் ஆகிய இயற்கைப் பொருட்களை மட்டுமே இந்த ஓவிய வரைதலுக்குப் பயன்படுத்தினார்.
இந்நிகழ்வை முகநூல் வழியில் தமது திறன்பேசி மூலம் காணொலிப் பகிர்வை வழங்கினார் நண்பர் பார்தீ.
https://www.facebook.com/p.thipan/videos/359129842655972 இது உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது. பார்வையாளர்களில் ஒருவனாக ஓவியரின் மகன் நதியானும் பங்கேற்றிருந்தான். ஓவிய வரைதலில் இருந்து அவ்வப்போது விடுபட்டு விலகி பார்வையாளர் நோக்கிலிருந்து
பார்வையிட வந்து செல்வார் ஓவியர். அப்படியாக இவர் வரும்போதெல்லாம் இந்த மகன் மலர்ந்த முத்துடன் தந்தையின் முதுகைத்தடவி உற்சாக மூட்டுவதை காணுற்று மெய்சிலிர்த்தேன்.


நிகழ்வு முடிய அரங்கம் எழுந்து நின்று கரகோசமிட்டது. அங்குவந்திருந்த சிறார்களை ஓவியர் சுவரின் பிறிதொரு பாகத்தைக் காட்டி நீங்களும் வரையலாம் என அழைப்பு விடுத்தார். மிகுந்த மகிழ்வோடு துள்ளிச் சென்ற நான்கு சிறார்களும் தமிழின் உயிர் எழுத்துகளை உற்சாகமாக வரையத் தொடங்கினார்கள். இதுவரை தமிழே கற்றிராத சிறுவர்களும் தமிழ் உயிரை தன்னார்வத்தோடு வரைய அரங்கில் கிளர்ந்த மகிழ்
உணர்வு அலை அனைவரையும் கௌவிற்று. அங்கிருந்த பல்தேசிய முகங்கள் மனித நேயர்களாக மலர்வுடன் பேசி உரையாடி சங்கமித்தது.


கலை என்பது கற்பனை ஊற்றெனப்பிறந்து அருவியாக வடிந்தெழும் மனவெளி ஆறு என்பார்கள் அறிஞர்கள். இது மன எண்ணங்களின் ஓர் அறிவியல் ஆற்றுகை. இதனை தெட்டத் தெளிவாய்ப் புலப்படுத்துகிறார்கள் சிறார்கள். நிகழ்வில் முதற் தடவையாகப் பங்கேற்றதால் மகிழ்ச்சியில் கிளர்ந்த அரங்க உரிமையாளரின் துணைவியார் இந்த காட்சி கூடத்தை நான்கு நாட்கள் தொடர வகைசெய்தார்.

 அங்கு சமூகமளித்திருந்த பலரும் இக்காட்சி அரங்கு வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத புத்துணர்வூட்டியதாக நன்றி கூறினர்.  வருகையாளர்கள் ஓவியங்களை ஆர்வத்தோடு பார்வையிட்டனர்.. இந்தப் பெருநகர இயந்திர அவசர வாழ்வில், அதுவும் ஒரு வியாழனன்று மாலையில், பாரிஸ் வாழ் வர்த்தக முகாமையாளர் ரமணன்  சண்முகதாசன் குடும்பமாக சமூகமளித்திருந்தமை ஆச்சரியமளித்தது. அவரது இரு சிறார்களும் தன்னார்வத்துடன் சுவரில் தமிழின் உயிரை வரைந்ததைக் காணுற்று பூரிப்படைந்தார். அரங்கில் வைக்கப்பட்டிருந்த எழுத்தணி ஓவியமொன்றை வாங்கி ஓவியரைக் கைகுலுக்கி உற்சாகப்படுத்தினார்.

முதற் தடவையாக இத்தகைய நிகழ்வில் பங்கேற்ற பிரான்சில் இடதுசாரிய அரசியல் கட்சி செயற்பாட்டாளரும் ஊடகரும் புலம்பெயர் தமிழருமான லியோன் செழியன் Leon Chezhiyan மனநிறைவுடன் ஓவியரின் இரு ஓவியங்களை வாங்கினார். தனது முகநூலில் பின்வருமாறு பதிவுற்றுமிருந்தார்.

« எரிந்த தாழ்களில் யாழ் பொது நூலகம் என எழுதப்பட்டிருந்த வாசகம்...ஓவியக்கண்காட்சியின் உச்சமாக இருந்தது. புத்தகங்களை எரிப்பதற்கு அழைப்பு விடுவதும், மானிட நாகரீகத்தின் தேட்டங்களை, கலை இலக்கிய பொக்கிசங்களையும் அதன் தொடர்ச்சிகைளயும், எச்சங்களையும் எரிப்பதும் அழிப்பதும் முதலாளித்துவ தேசியவாதத்தின் அடிப்படையான ஜனநாயவிரோத பாசிசப்பண்பாகும். »

க. முகுந்தன் (பிரான்ஸ்) டிசம்பர் 2021
காக்கைச் சிறகினிலே சஞ்சிகை ஜனவரி 2022 

Photographs : Mukunthan KANDIAH