ஜெயலட்சுமியின் பெரும்பான்மையான எண்ணெய்வர்ண முக உருவச் சித்திரங்கள் பயிற்சியையும் தேர்ச்சியையும் நேர்த்தியையும் பிரதிபலிக்கின்றன. ஜெயலட்சுமி தனது நாற்பதாவது வயதில் எண்ணெய் வர்ணத்தில் வரைந்த சுய முக உருவச்சித்திரம் (Self Portrait 1976 oil on canvas 48 x 67cm) நூலை மேலும் மெருகூட்டுகிறது. ஓவியை தனது பெற்றோர்களது முக உருவாசித்திரத்தையும் வரைந்துள்ளார். My Mother Chellammah Rajandram (oil on canvas 42 x 57cm) My Father Sinnathamby Rajandram ( oil on canvas 42 x 57cm.
எண்ணெய் வர்ண ஓவியங்களை கித்தானில் வரைவதற்காக விசேடமாக தயாரிக்கப்படும் சிறிய சாந்தேப்பை வடிவில் உள்ள "தட்டு கத்தி" (Palette Knife) - பயன்படுத்தி ஜெயலட்சுமி கீறிய ஓவியங்களை நேரில் பார்த்த சில ஆங்கில விமர்சகர்களின் கருத்து நூலில் வர்ணிக்கப்பட்டுகிறது. கித்தானில் வர்ண வளைவுகள், திட்டி யாகவும் அழுத்தமாகவும் செல்லும் தன்மை கவிநயம் கொண்டவை. "பெரும்தீ" என்ற தலைப்பில் வரையப்பட்ட ஓவியம் (Conflagration - Oil on Canvas, 45 x 61 cm), அதன் பாடுபொருள் ஓவியர் டேனரையும் (J. M. W. Turner 1775 - 1851), வர்ண அசைவுகள் ஓவியர் வான்கோவையும் (van gogh 1853 - 1890) நினைவூட்டுகின்றன.1973ல் பரிசு பெற்ற ஓவியமான தென்னந்தோப்பு (Coconut Palms) ஓவியம் எமது நிலத்தின் நினைவுகளோடான பாடுபொருள். ஜெயலட்சுமியின் இயற்கைக்காட்சி ஓவியங்களின் தலைப்புகள் - நிழல்கள், பச்சை வயல், மார்கழி நிலவு, சுறுசுறுப்பான, மூன்று நிர்வாணம், இலை அற்ற, நீல நீர், மார்கழி நிலவு, அருவி, நெல் வயல், காடு, செஞ்சிவப்பு வானம், தேயிலை தோட்டம், சூரிய அஸ்தமனம்.