The Cathedral of Notre Dame in the 15th century, illuminated by the Master of Anthony of Burgundy
சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் பாரிஸ் நகரத்தில் கட்டடங்களின் நெரிசலையும் தாண்டி விசாலமான செயின் நதிக்கு மேலாக காணக்கிடைப்பது கொடை. கோடையின் ஆரம்பத்தைக் கட்டியமிடும் இளவேனில் காலமாகையால் சூரியனின் மென்மையான வெளிச்சமும் ஆகாயத்தில் தெரியும் பல வர்ணங்களும் ஓவிய ஒளி அழகியல். நதியில் தெறிக்கும் சூரிய கதிர்களையும் பாரிசின் கட்டிடக்கலையையும் ரசித்துக்கொண்டு செயின் நதிக்கு மேலாகச் செல்லும் புகையிரதத்தில் 15 ஏப்பிரல் 2019 மாலை வழமைபோல் பணிக்குச் சென்று கொண்டிருந்தேன். திடீர் எனத் திகைக்கும் வண்ணம் பாரிஸ் நகரின் நடுவில் அமைந்துள்ள கட்டடங்களுக்கு மேலாக ஒரு மீட்டர் அளவு தீச்சுவாலையும் புகை மண்டலமும் தெற்கு நோக்கி வீசும் காற்றுடன் கரைந்து கொண்டிருந்தது. அந்தப் புகையிரத பெட்டிக்குள் நானும் எனக்கு அருகாமையில் நின்ற இன்னொரு இளைஞனும் மட்டுமே இக்காட்சியை கண்டோம், மற்றைய அனைவரும் கைத்தொலைபேசி, சஞ்சிகை, பத்திரிகை வாசிப்பவர்கள். நான் அந்த இளைஞனிடம் வினவினேன் எரியும் சுவாலை "நோத் டாம் -கத்தீற்றலுக்கு (Cathédrale Notre-Dame de Paris) அருகிலே தெரிகிறது. அடுத்து வந்த சில தரிப்புக்களில் இறங்கி எனது வீட்டிற்கும், காக்கைச் சிறகினிலே குழுவில் இயங்கும் பாரிஸ் நண்பருக்கும் தொலைபேசி அழைப்பு கொடுத்தேன் அவசரமாக தொலைக்காட்சியை பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன். உள்நாட்டு ஊடகங்கள் ஒன்றுமே உத்தியோகபூர்வமாக தீ விபத்து பற்றிய அறிவிப்புகளை கொண்டிருக்கவில்லை, கடந்த 30 நிமிடத்திற்கு பிறகு வெளிநாட்டு ஊடகங்கள் சில ஆங்கில செய்திகளை "நோர்த் டாம் பாரிஸ்" தலைமைத்துவ தேவாலயம் தீப்பற்றி எரிகிறது என்ற செய்தியை வெளியிட்டன, அதன் பின்னரே உள்நாட்டு ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தன. இது உலகின் முதன்மைச் செய்தியாகி நேரடிக் காணொலியாக ஒளிபரப்பாகியது. உலகமே உறைந்துபோனது.
Notre-Dame de Paris - April 2019
பாரீசில் காணுற்ற அத்தீச்சுவாலை, 1981ல் தென்னாசியாவிலேயே பெரிய நூலகமாக இருந்த யாழ் நூலகம் தீக்கிரையான காட்சியையும், முள்ளிவாய்க்கால் 2009 மே இறுதிப் போரில் குடிமனைகள் எரிந்து கரும்புகை சூழ்ந்த காட்சியின் நிழல்களாக மனதைச் சஞ்சலிக்க வைத்தது. யாழ் நூலகத்தில் இருந்த புத்தகப் பொக்கிஷங்களின் பெறுமானம் அளப்பெரியது. ஆனால் கொழுந்துவிட்டெரிந்த அந்தத் தீயை யாரும் அணைக்காது வேடிக்கைப் பார்க்க எல்லாமும் எரிந்து சாம்பலாகின. முள்ளிவாய்க்காலில் மாண்ட மக்களின் ஓலம் இன்னும் ஓயவில்லை. இவை தசாபத்தங்கள் கடந்தும் ஆறா வடுவாகி நிலைத்துவிட்டன.
Notre-Dame de Paris 1944
அங்கு விரைந்த ஐந்நூறு தீயணைக்கும் படையினரின் பக்குவப்பட்ட பணியின் நேர்த்தியில் ஆலயத்தின் உள்ளிருந்த ஓவியங்கள் சிற்பங்கள் கண்ணாடி வேலை பொருட்கள் போன்ற கலை பொக்கிஷங்கள் அவசரமாக அகற்றப்பட்ட பின்னரே முழுமையாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 19ம் நூற்றாண்டில் இவ்வாலயத்தின் கூரையின் நடுவில் மரத்தினால் ஆனால் தூபியின் மேல் நிறுத்திய சிலுவையும் அதன்மேல் பிரான்சின் தேசிய பறவையான சேவலும் எரிந்து முறிந்து கீழே விழும் காட்சி உலகையே உலுக்கியது. இந்தக் குறியீட்டு தூபி மதம் கடந்து பிரான்சின் கலாச்சார அடையாளமாகவே பார்க்கப்பட்டது. கத்தோலிக்க மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதுவொரு கெட்ட சகுனமாவே உணரப்பட்டது, அதற்காக இவர்கள் தேவாலயத்தின் வெளித்தரையில் மாபெரும் இறை வணக்கத்தை செலுத்தினர். தேவாலயத்தின் திருத்த பணிகள் நடந்து கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தால் தீ பற்றிக் கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேவாலயத்தின் முன்னைய காலங்களில் நடந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கலை பொக்கிஷங்கள் தற்போது பாரிஸில் உள்ள 'மியூசி டே க்ளுநே' (Musée de Cluny) போன்ற வேறு சில கலைக்கூடங்களில் சேகரிப்பில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
பாரீசின் மையத் தேவாலய எரிவுச் செய்தி பாரெங்கும் பரவி ஒருவாறு ஆறி அமர, தமிழ் மக்களிடையேயும், தமிழ் மக்களை கவனிக்கும் ஊடகங்களின் அடுத்த செய்தியாக முள்ளிவாய்க்காலில் பத்தாண்டு நினைவு மே 18ஐ நோக்கியதாக இருந்தது. இறந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் நீதிக்கு விடையற்ற கேள்வியாகவும் தொடர்கிறது.
Mullivaikkal Sri Lanka 18 may 2009
ஆனால் இலங்கையில் யாருமே எதிர்பார்த்திருக்காத வேளையில் 21.05.2019 உயிர்த்த ஞாயிறு (easter) அன்று கொழும்பு, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் உட்பட தலைநகர் கொழும்பில் அமைந்த உயர்தர விடுதிகளிலும், கொழும்பை அண்மித்த நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயத்திலும், இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பிலுள்ள சியான் தேவாலயத்திலுமாக ஒரே நேரத்தில் பல குண்டுகள் வெடித்தன. இது கொடூர மனித அழிவாக உலகின் கவனத்தை ஈர்த்தது. இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பத்தாவது தசாப்த வேளையில் மீண்டும் பீறிட்டெழுந்தது மரண ஓலம். இது முழுமையான உலகின் கவனதிற்குள்ளாகி பாரீசின் உலக அதிசயங்களில் ஒன்றான ஐபில் கோபுர விளக்கொளி நிறுத்தப்பட்ட அஞ்சலியாகப் பதிவுற்றது. இது போன்று உலகின் பல பாகங்களிலும் ஒவ்வொரு வடிவில் அஞ்சலி நிகழ்வுகள் நிகழ்ந்தன. சில ஊடகங்கள் மூன்று நாட்களாக இச் செய்திகளைத் தொடர்கின்றன.
‘இலங்கை மக்களிடையே இனிப் போர் வேண்டாம்’ என்ற ஒரு மன நிலையும் மக்களுக்கு இடையில் உள்ள உறவும், நாட்டின் மேல் உள்ள அக்கறையும், மீளமைவுறும் விவசாய வளர்ச்சியும், உல்லாச பயணிகளின் வருகையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சாதகமாக கைகூடும் வேளையில், பொறாமை கொண்ட அதிகாரவெறியின் சூழ்ச்சி அப்பட்டமாக வெளிப்படுகிறது. "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது யார் ?" எனும் வினா உரத்தெழுகிறது. பெரும்பான்மையாக தமிழர்கள் கூடும் தேவாலய ஆராதனையில் இருந்த மக்களும் குழந்தைகளும் என்ன பாவம் செய்தனர்? 'ஐந்து நட்சத்திர விடுதியில்' தங்கியிருந்த உல்லாசப் பயணிகள் என்ன பாவம் செய்தனர்?
இலங்கையில் 1958, 1977, 1983, 1987-1990, 2009 இறுதி யுத்தத்வரை போது மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து குவியும்போது ஐபில் கோபுரம் எங்கே போனது?, உலக ஊடகங்கள் எங்கே போயின? வினாக்கள் அடுத்தடுத்தெழுகின்றன.
‘எய்தவன் இருக்க அம்பை நோகமுடியுமா?’ எனும் முதியோர் வாக்கில் பொதிந்துள்ள பொருள் மிக ஆழமானது.
இலங்கை 2009 மே இறுதிச் சமரில் உயிர் நீத்த அனைவருக்குமான நினைவேந்தலாக ஆண்டு தோறும் மரநடுகை தொடர வேண்டும். இந்த மே 18 பத்தாவது ஆண்டில் முள்ளிவாய்க்காலில், ஒரு நினைவுதூபி அல்லது ஒரு மாபெரும் அகல்விளக்கு நிறுவப்பட்டு. அவ்விளக்கு ஓர் அணையாச் சுடராக இழப்பின் சுமைதாங்கியாக ஆற்றுபடுத்துமா ?
References ..
Illustration of the Last Judgment, central portal of west façade
© 2022 Web design and upgrade - Atelier - Papillon de Paris Art