இடைவிடாமல் இயங்கிய படைப்பாளி
அ. மாற்கு (25 யூன் 1933 - 27 செப்டம்பர் 2000)
Painter A.Mark 1933 - 2000
புகலிடத்திலும் ஈழத்திலும் சமகாலத்தில் ஓவியம் சார் பேச்சுக்களும் எழுத்துக்களும் காண்பியங்களும் ஆரோக்கிய பாதையில் வளர்கின்றன. போருக்கு முன், போர்க்கலாம், போருக்குப்பின் என மூன்று காலங்களாக பிரித்து கலை அசைவுகளை அணுகலாம். இதில் போருக்கு முன்னும் பொர்க்காலத்திலும் வாழ்ந்த ஓவியர் மாற்குவின் தீவிரமான படைப்புகள் மீண்டும் மீண்டும் நாம் பேசுதலின் அவசியம், காலத்தின் தேவை.
கலை ஆர்வலர்கள், மாணவ இயக்கங்களின் களப்பணியின் உழைப்பின் நிமித்தம் பத்மநாப ஐயர், சுகுமார், ஜேசுராசா தலைமையில் 1987ல் வெளிவந்த "தேடலும் படைப்புலகமும்" என்ற ஓவியத் தொகுப்பு நூல் மாற்கு பற்றி அறியவும் தேடவும் எனக்கு வழிகோலிற்று. நூலின் முகப்பு அட்டையின் மாற்குவின் ஓவியம் “முகம் - முகமூடிசார்” எனது ஓவியங்களுக்கு ஊக்கி. ஈழத்து கலைப்பயணங்கள் சார் எனது தேடலின் நிமிர்த்தம் “தேடலும் படைப்புலகமும்” மூலப்பிரதியை பத்மநாப ஐயர் பரிசாக கையளித்தார், பெருமிதம் கொண்டேன். மாற்குவின் மூல ஓவியங்கள் கையில் கிடைத்தது போன்ற ஓர் திருப்தி. 2000 ஆம் ஆண்டு யூன் மாதம் மாற்குவின் பிறந்தநாளை ஒட்டி கனடாவில் “காலம்” சஞ்சிகை சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது, பெற்றுக் கொண்டேன். மாற்குவின் ஞாபகார்த்தமாக சென்ற வருடம் இலங்கை சிறுவர் ஓவியப்போட்டி ஒன்றை இங்கிலாந்து “விம்பம்” ஒழுங்கமைத்தது. மாற்கு பற்றி சிறப்பு நூலொன்றையும் வெளியிட்டனர். மேலும் ஆங்காங்கே பிரசுரமான கட்டுரைகள், இணைய வழி தேடலும் பயனளித்தது எனக்கு ஓவியர் மாற்குவின் படைப்புலகம் பற்றி அறிய. |
கால் நூற்றாண்டாக மேற்குலகில் வசிக்கும் எனது கலைப்பயணத்தில் அறிந்தவையும் கேட்டவையும் கண்டவையும் - கண்டு வியந்தாலும் தெற்காசிய படைப்புலகப் பிரளயங்கள் மேற்குலகத்திற்கு எவ்விதத்திலும் சளைக்காதவை, காலத்தாலும் பழமையானவை. குறிப்பாக கோலம், வார்லி ஓவியங்கள், சுதையோவியங்கள் என பட்டியல் நீளும். 500 வருட - காலனித்துவத்திற்கு பிற்பட்ட (Post-colonial) காலத்தின் திட்டமிடப்பட்ட போர் நாடக மேடை நாமறிந்தது. அவ்வாழ்வியலில் பொருளாதாரத் தேடல் கொண்டவர்களாக மாற்றப்பட்ட எம் மக்களிடத்தில் கலைக்கான தளம் விரிந்து செல்லாமை வியப்பல்ல. புகலிடத்தில் வாழும் நமக்கு நம் அகதி வாழ்வின் சிக்கல்களை பேசுவதிலும் தாய் நிலத்தின் மேலான தாகமும் ஏக்கமுமே அதிகம், அதிலும் ஈழத்து கலை மீதான தேடல் ஒரு படிமேல். மேற்கத்தேயர்களுடன் கலை சார் உரையாடலில் நமது கிராமிய கலையின் ஆழத்தையும் மொழியின் காலத்தையும் பெருமிதமாக பேசும் பொழுது சமகாலத்து ஈழத்து ஓவியர்களான மாற்கு, ஆசை இராசையா, கனகசபை போன்றோரும் வருவர். ஈழத்து ஓவியப் பாதை பிரம்மாண்டமாக உருப்பெறாவிடிலும் இடைவிடாத தொடர் பயணத்தின் முயற்சிக்கு, பல ஓவியர்களின் படைப்புகள் சாட்சி.
|
மாற்க்குவின் போர்க்கால ஓவியங்கள் “வெளிச்சம், எரிமலை” போன்ற சஞ்சிகைகளிலும் கண்டு வியந்ததுண்டு. அதே பாணியில் வரைந்த மாற்க்குவின் மாணவர்களது ஓவியங்களும் நிகர். தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி கற்ற "சைக்கிள் காலப்பகுதியில்" (1980கள்) மாணவர் இயக்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மூன்று ஓவிய காண்பியம் - நிகழ்ந்த வரலாறு சிறுவயதில் நான் நேரில் கண்ட உண்மை. முதன் முறையாக ஓவியங்களை கித்தானில் பார்த்து வியந்தேன். அதை ஒழுங்கமைத்து மாணவர்கள் - முதிர் நிலையில் கோவிட் உள்ளிருப்பு கால பகுதியில் ஐரோப்பாவில் அறிமுகமானார்கள், மகாஜன ஓவிய காண்பியம் பற்றி உரையாடினோம், சிலாகித்தோம், பெருமூச்சு விட்டோம் - சமாந்தரமாக ஈழப்போர் அரும்பு விட்ட கதைகளும். அக்காண்பியத்தில் மாற்குவின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறினார்கள், புருவம் உயர்த்தினேன்.
|
இயக்குனர் வூடி அலன் Woody Allen கூறியது போல் “பிக்காசோ ஒரு கலைஞன், வான் கோ ஒரு ஓவியன்”. மாற்குவும் பிகாசோ போன்றே தொடர் இயங்கு நிலைக் கலைஞர். பல பரிசோதனை முயற்சிகளும் தேடலும், அவருக்கு அவரே நிகர். மாற்குவின் படைப்புக்களின் தொடர் காண்பியம் ஆண்டாண்டு தோறும் அவர் வாழும் காலத்தில் நிகழ்ந்திருந்தாலும் அவை பற்றிய விமர்சனங்கள் தொடராக வெளிவந்திருந்தாலும் அவரின் படைப்புக்களின் வீரியமும் தேடலும் பார்வையாளனின் புரிதலுக்கு வழிவகுத்திருக்கும். பலவித பாணிகளில் வரையப்பட்டவை கால வரிசையில் பிரிக்கப்பட்டு ஓவியத் தொகுப்பு நூல்களாக வெளிவந்திருந்தாலும் பார்வையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு கலை மீதான தேடலையும், புரிதலையும் மேலும் பிறப்பித்திருக்கும். நாட்டின் பிரச்சனைகளைத் தாண்டியும் மாற்குவின் படைப்பாக்கம் சோர்வடையவில்லை என்பது உண்மை, அவர் சூழலில் கிடைத்த கச்சா பொருட்கள் அனைத்தும் அவர் படைப்பின் ஊடகம்.
|
மாற்கு வெவ்வேறு காலப்பகுதியில் வரைந்த சுயபிரதிமை ஓவியம் மிக முக்கியமான ஆவணம். மறுமலர்ச்சி காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து 'தாயும் சேயும்' என்ற தலைப்பிலான ஓவியம் மரத்தில் வரையப்பட்டதிலிருந்து நவீன காலம் வரைக்கும் குறிப்பாக பிக்காசோவின் தாயும் சேயும் ஓவியம் வரையிலான தொடர்ச்சியில் - மாற்குவின் தாயும் சேயும் ஓவியமும் அத்தொடரின் நீட்சி. அவரது படைப்புகள் காப்பகத்தில் காப்பகப்படுத்தப் பட்டிருந்தாலும், மேலும் போரின் இடப்பெயர்வு காரணமாக தொலைந்த ஓவியங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும் வடபுலத்தின் அசையும் சொத்தான அவரது படைப்புக்கள் நிலை பெற்றிருக்கும் - ஐயமில்லை. தப்பித்ததில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மன்னாரில் நடக்க இருக்கும் காண்பியத்தில் மக்களின் பார்த்வைக்காக 13 - 16 மார்ச் 2025. நேரில் சென்று பங்களிக்க முடியவில்லையே என்ற ஒரு ஏக்கம்.
VP. வாசகன் பாரிஸ் |