ஓவிய நூல் ஆரம்பிப்பதற்க்கு முன்னரே முகநூல் வழியாக ஆசையுடன் உரையாடியிருந்தேன். நூல் ஆரம்ப பணியின்போது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் அனுப்பியிருந்தேன். யாழ் குடாநாட்டு வாழ்வியலில் ஆதரவுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் ஆவண நூலின் பணி தொடர்வதாக கூறினார். முதுமையும் நோயும் வருத்துவதாகவும் தனது சிந்தனையின் வேகத்திற்க்கு உடலுறுப்புக்கள் வேகம்கொடுப்பதில்லை எனவும் வருந்தினார். நூல் வெளிவந்ததும் சில நூல்களை பாரிசுக்கு கொள்முதல் செய்வதாக உறுதியளித்தேன். காலங்கள் கரைந்தோடின, நோயும் ஓவியனை வாட்டியது, அவருக்கும் எனக்குமான உரையாடலும் உறைந்தது. இதற்கிடையில் இலங்கை தமிழ் ஓவியை ஜெயலக்சுமியின் ஓவியங்கள் தாங்கிய ஆவண நூல் கைக்கெட்டியது. ஆனந்தத்தில், அப்பெண்மணியின் தைலவர்ண ஓவியங்களின் தேர்ச்சிபற்றி சென்ற உடல் சஞ்சிகையில் ஆவணப்படுத்தினேன். அக்கட்டுரையை ஆறுதலாக எழுதிமுடிக்கும் இறுதி நாட்க்களின் சந்தோசத்தில் இருக்கையில், ஆசை இறந்த செய்தி காதுக்கெட்டியது. நம்பிக்கைக்குரிய ஈழத்து நிலக்காட்சி (landscape) ஓவியனும் விடைபெற்றான். ஒருகணம் ஓவியர் வான்கோ சிந்தனையில் ஊசலாடினார். ஆசை வாழும்காலத்திலேயே தனது ஓவிய ஆவணநூலை வெளியிட்டது மனதிற்க்கு நிறைவைத்தந்தது. ஓவியன் ஒவியத்தைமட்டுமல்ல தனது அனுபவத்தையும் ஆவணப்படுத்திவிட்டான் அடுத்த தலைமுறையினருக்கு. ஒரு பூரண படைப்பாளி தனது பணியை செப்பனே செய்து மடிந்தான்.
பாரிசில் ஓவிய ஆர்வமுள்ள பத்து நண்பர்கள் ஒன்றிணைந்து இருப்பது நூல்களை வாங்குவதாக ஒப்புக்கொண்டோம். பாரிசுக்கு பத்து நூல்களும், மீதி பத்தை இலங்கையில் உள்ள வெவ்வேறு மாகாண நூலகங்களுக்கு அன்பளித்தோம். கோவிட் முடக்ககாரணமாக யாழிலிருந்து கொழும்பு கொடகேனா வருவதற்க்கே சிலமாதங்களாகின. சில ஆர்வலர்களின் உதவியுடன் ஆடி அசைந்து பாரிஸ் - லா சபேலில் உள்ள பலசரக்கு களஞ்சியத்திற்க்கு ஒருமாலைப்பொழுதில் வந்தடைந்தது. மொத்தமான காட் போட் பெட்டியை திறந்ததும் - ஓவிய நூலும் நூலுனுள் வைக்கப்பட்டிருந்த சிறிய நூல் அரங்கேற்ற கையேடும் கண்டு மனமகிந்தோம். அவரவர் கைகளுக்கு அதன் வெகுமானத்துடன் கையளித்தோம். கனதியான கனமான ஓர் அழகிய ஓவிய நூல் கையில் கிடைத்ததையிட்டு பூரிப்படைந்தோம். ஆரோக்கியமான பின்னூட்டங்களும் பேசப்பட்டது. தமிழ் ஓவியப்பரப்பில் சுயசரிதை நூல் A4 அளவில் பிறந்திருப்பது முன்னுதாரணமாகிறது.