பாணின் சுயசரிதையை அறிந்து நகருகையில் இதைச் சூழவுள்ள நிலத்தில் ஐரோப்பிய மற்றும் மத்திய தரைக் கடலை அண்டிய மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு அதற்கான விபரங்கள் கொடுக்கபட்டிருந்தன. இதனைக் காண வரும் மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள், விவசாயிகள் வெளிப்படுத்தும் உற்சாக உணர்வுகள் நாம் இதனைப்பார்க்கக் கொடுத்த நுழைவுச் சீட்டின் பெறுமதியை மீறியதாக உணர வைத்தது. அச்சூழலின் காட்சிகளும், நறுமணமும் அமைதியும் என்னை மீண்டும் ஒருநிமிடம் நான் பிறந்த இடமான இயற்கை மரங்களும், நெல்வயல்களும், மரக்கறித்தோட்டங்களும், கலைஞர்களும் வாழ்ந்த எனது பிறப்பிடமான அளவெட்டி கிராமத்திற்கு இழுத்து வாழ்வுச் சக்கரங்களை சுழற்றியது.
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மனித நாகரீகத்தின் பொறியியல் வளர்ச்சி வேகம் கண்டது. ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட சக்கரங்களின் சுழல் உத்தி முறை விவசாய தொழிலுக்காகவே அதிகம் பயன்பட்டது, அப்பாலும் நெசவு, மட்பாண்டத்தொழிலிலும் பயனளித்தது. நமது பயன்பாட்டிலும் பல கருவிகள் சுழல் உத்தியில் இயங்கின அவற்றில் செக்கு, சூத்திரக் கிணறு போன்றன மின்னல் கீற்றாக கண்ணுள்ளே ஒரு கணம் தோன்றுகிறது. இவை இரண்டையும் எனது பாலர் வயதுக்காலங்களில் கேட்டு, பார்த்து, தொட்டு உணர்ந்து கொண்டேன். குறிப்பாக எனது பாட்டனார் நீர் பாச்சுவதற்காக இயக்கிய இரு வாளிச் சூத்திரதில் நேரத்தை போக்கவே அதன் மேல் ஏறி புகையிரதவண்டியில் நீண்ட தூரம் பயணிப்பதாக எண்ணிப் பயணிக்கையில் சமநிலை தடுமாறி பின்னோக்கி விழுந்த அனுபவங்கள் நிறைய உண்டு.
உழுந்து, பயறு, அரிசி போன்றன தானியங்களை கையின் விசையினால் மாவாக்க பயன்படும் கருவியே திருகை என அழைத்தோம், அவையும் சுழல் உத்தியே. திருகையின் பருமனான தோற்றத்தை கொண்டு விலங்குகளின் விசை மூலம் இயங்குவதே செக்கு எனும் பருமனான இயந்திரம். இதன் பயன்பாட்டில் எள், தேங்காய், இலுப்பை என்பவற்றிருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்க பயன்படுத்தினர். எண்ணெய்யை பிரித்தெடுத்து மீதி வரும் சக்கையின் பரிமாணம் புண்ணாக்கு, அரப்பு என பெயர் வைத்து நமது கிராமங்களில் பயன்பெற்றனர்.
சூத்திரக் கிணறு இயந்திரம் – இரு வாளிச் சூத்திரம், பலவாளிச் சூத்திரம் எனும் வகைகளில் உண்டு. இரு வாளிச்சூத்திரம் சற்று சிக்கலான பொறியியல் முறை சார்ந்தது. நிலத்தில் பூட்டப்பட்டுள்ள நடு அச்சிலிருந்து நீளமான இரும்பு கேடயத்தின் மறுபுறத்தில் புகையிரத வண்டியின் சக்கரத்தின் அளவில் இரண்டு இரும்பு சக்கரங்களை இரண்டு மாடுகள் பூட்டி இழுக்க அவை சாதாரண கிணற்றிலும் மூன்று மடங்கு விட்டமுள்ள இரும்புத் தண்டவாளத்தில் இரு சக்கரங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவரும். குறுக்குவாட்டிற்கு தொங்கும் இரும்புச்சங்கிலிகள் வேறுபல இரும்புச்சக்கர உதவிகளுடன் கிணற்றினுள் இரு கம்பிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு மீற்றறிலும் உயரமான இரு இரும்புவாளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக நீர்ப்பாச்ச சாத்தியப்படும்.
உலகின் வெவ்வேறு நாடுகளின் அகழ்வாராய்ச்சியின் தகவல்கள் பொறியியல் வளர்ச்சியின் பல ஆதாரங்களை விளக்குகிறது. நமது பாவனைகளில் பல கருவிகள், உபகரணங்கள் பயன்பாட்டில் இருந்து
உலகமயமாதலின் போர்வைக்குள் அழிக்கப்படுகின்றன. இவ்வேளைகளில் எமது முன்னோரது நாகரீக வளர்ச்சியின் பாவிக்கப்பட்ட பொருட்களை சேகரித்துப்பாதுகாக்கும் அருங்காட்சியகம் ஈழத்திலும், தமிழகத்திலும் கிராம நகர அமைப்புகளில் அமைத்துப்பேணுவது அத்தியாவசியமானது.