நினைவுகளின் நினைவுகள்
மகாஜனா கல்லூரியின் வாசகம் - " உனை நீ அறி " (Know Thyself) அவ்வாசகமே எம்வாழ்வின் பல்வேறு தருணங்களிலும் புத்திமதி கூறும் பொன்மொழி. கல்லூரியின் வளர்ச்சிப்போக்கில் எமக்கும் கல்லூரிக்கும் ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் இடையிலான காத்திரமான உறவும், பசுமையான நினைவுகளும்.
விசிறி வாழை 'மடகஸ்கா' தீவை பூர்விகமான இத்தாவரம் எங்காவது தென்பட்டால் பாடசாலை எண்ணங்கள் சூழ்ந்துகொள்ளும். ஸ்தாபகர் துரையப்பா கட்டடத்திற்கு முன்னால் விரிந்த விசிறி வாழை பாடசாலைக்கே உரிய சின்னமாக பதிந்துவிட்டது மனதில். விசிறி வாழைக்கு முன்னால், ஓவியர் சிவப்பிரகாசம் அவர்களால் கருஞ்சாம்பல் நிறத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஸ்தாபகர் துரையப்பாவின் சிலை, கம்பீரம் தான். தட்டி வானில் பிரயாணிக்கையில் கல்லூரியை நோக்குவோமானால், முன்னால் துரையப்பா பின்னால் விசிறி வாழை - மயில் தோகை விரித்தாடுவது போல் காட்சி தரும். பாடசாலை வளாகத்தில் விசிறி வாழை அசோகமரம் தேக்கு மா பலா தென்னை நெல்லி புளி சவுக்கு போன்ற மரங்கள் பாடசாலையின் சுயசரிதையை கேட்டால் சொல்லும். வாழையடி வாழையாக எனது பாட்டனார் (அப்பு - அம்மாவின் தகப்பனார்) அம்மா மாமா நான் சகோதரிகள் உற்றார் அயலவர்கள் பலரும் மகாஜனாவின் மாணவர்களே. தொண்ணூறுகளின் இறுதியில் உலங்குவானூர்தி தரையிறங்குவதை தடுப்பதற்காக திறந்த வெளியரங்குகள் எங்கும் பட்ட மரங்கள் நடப்பட்டன. எமது மைதானத்திலும் தென்னை பனை கமுகு போன்ற பட்ட மரங்கள் நடப்பட்டு விளையாட்டு பாடம் ஸ்தம்பிதமானது. நாம் விடவில்லை, பட்ட மரங்களுக்கு நடுவே ஓடிப் பிடித்து விளையாடினோம். விளையாடுகையில் பட்ட மரத்தில் மோதி மூக்கு அடிபட்ட நோவோடு இடப்பெயர்வு. (Recreation of Post-War) காட்சிகள் மாறினாலும் நினைவுகள். !
சயிக்கிள் காலமான எண்பதுகளின் நடுப்பகுதி மகாஜனாவின் 75து ஆண்டு பூர்த்தியை எட்டியிருந்த காலம். அக்கால பகுதிகளில் பாடசாலை வளாகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மாணவர்களாகிய எமக்கு பாடப்புத்தகங்களை தாண்டிய சிந்தனைக்கு ஊற்றாகின. அந்நிகழ்வுகளுள் மூன்று ஓவியக் கண்காட்சிகள் அடிக்கோடிடப்பட வேண்டியவை. அதில் ஒன்று மாணவ இளைஞர் பொது மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு, மகாஜனாவில் முதல் காட்சியும் தொடர்ந்து வேறு பாடசாலைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன. பஞ்சநாதன் மாஸ்டரின் விஞ்ஞனாக்கூடத்திற்கு அருகில் அமைந்த உயர்தர வகுப்பில் ஆரம்பித்தது கண்காட்சி. மேசையில் வைத்து சுவரில் சாத்தப்பட்டு கித்தானில் (Canvas) வரையப்பட்டிருந்த ஓவியங்களில் ஒன்று என் மனக்கண்ணில் இன்றும். கறள் பிடித்த இரும்புத்தொப்பி ஒன்று நிலத்தில் சற்று புதைந்து வெடித்த நிலையில், அவ்வெடிப்பினூடு ஒரு சிறு செடி வெளியே வந்து சூரியனைப்பார்த்து சிவப்பு பூ பூத்திருந்தது. புவியில் அரங்கேறும் சமகாலத்து சமர்களுக்கும் பொருத்தமான ஓவியம். அவ்வோவியத்தின் உந்துதலால் 2005ம் ஆண்டு கித்தானில் வரைந்து பாரிஸில் காட்சிப்படுத்தியிருந்தேன். தற்போது கனடா ஒன்ராரியோவில் தனியார் சேகரிப்பில் காட்சிப்பொருளாக...
திண்ணைப்பள்ளியாக துரையப்பாபிள்ளை அவர்களின் வீட்டில் ஆரம்பித்து சரஸ்வதி வித்தியாலயமாக பின் மகாஜனாவாக வியக்கத்தகு வளர்ச்சி - நேற்றும் இன்றும் நாளையும். பாடசாலையின் கட்டடக்கலையை விபரிக்காத கட்டுரைகள் இல்லை, அதுவும் உண்மைதான். துரையப்பா, சின்னப்பா, ஜெயரட்ணம் போன்ற மகான்கள் மேற்கத்திய கீழத்தேய பண்புகளை உள்வாங்கி நமது பண்பாட்டையும் சேர்த்து குழைத்த கலவை அது, நமது பள்ளி. சிந்தனைப்போக்குடன் ஒவ்வொரு கூரைகளும் செப்பனே திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டன. நுண்கலைக்கான பிரத்தியேக வகுப்புகள் இன்று நினைத்தாலும் விசித்திரமானவை. அவை எங்கே. நடன வகுப்பு சங்கீத வகுப்பு தண்ணிர் குடிக்கும் இடம் பாலர் வகுப்பு தச்சுவேலை சித்திரவகுப்பு சமையல் வகுப்பு முன்னால் வரிசையாக கமுகமரங்களும் பூத்த செவ்வரத்தையும், அழகியல் தான். நான் அனுபவித்த சித்திரவகுப்பு என் ஓவிய வாழ்வின் அத்திவாரம். வகுப்பறையின் கிழக்குச்சுவரின் சதுர இரும்பு கம்பிகள் ஊடாக பாயும் சூரியக்கதிர்களும், ஓவிய ஆசிரியரான தியாகராஜ மாஸ்டரின் அமைதியும் அன்பும் ஊக்குவிக்கும் பண்பும் என் ஓவிய ஆர்வத்தை வளர்த்திற்று. சித்திரமாணவர்களுக்கு பயிற்சிகள் தருவதோடு சேர்ந்து தானும் நேர்த்தியான ஓவியங்கள் வரைவது நமக்குள் புத்துணர்ச்சியை ஊட்டின. வகுப்பறையின் சுவர்களில் தொங்கிய மாணவர்களது ஓவியங்களும் ஆசிரியரின் மேசைக்கு பின்னால், சிறிய ஓவிய களஞ்சியத்தில் சேகரிப்பில் இருந்த மாணவர்களது ஓவிய சுருள்களும் வகுப்பறைக்குள் நுழையும் போது நீர் வர்ணத்தின் மணமும் ஓவிய கூட்டத்திற்கே உரிய ஓர் உணர்வை உணர்த்திற்று. தியாகராஜ மாஸ்டர் என் ஓவிய ஆர்வத்தை உளமறிந்து பாடசாலையில் நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கு 'பிரிஸ்டல் போர்டில்' (Bristol board) ஓவியங்கள் வரைய பணித்தார். சிறியளவு ஓவியங்களில் இருந்து பெரிய அளவு ஓவியங்களுக்கான உத்திகளை கற்பித்தார் - கற்றுக்கொண்டேன். ஓவிய ஊடகங்களை தேர்வதிலும் பயிற்றப்பட்டேன். மறுமலர்ச்சி கால ஓவியர் டாவின்சி, நவீன ஓவிய புரட்சிக்காரர் பிகாசோ பற்றி அறிந்தேன். பிக்காசோவின் கியூபிச பாணி(Cubism) ஓவியங்களைத் தாங்கிய நூலை தியாகராஜ மாஸ்டரின் கைகளில் பார்த்து வியந்தேன், நகல் எடுத்தேன். ஒரு தினம் சித்திரவகுப்பில் எமக்கு விரும்பியதை வரையுமாறு பணித்தார், பண்பியல் ஓவியம் (Abstract painting) ஒன்றை சூடான வர்ணங்களை பிரயோகித்து வரைந்ததை, மிகவும் மெச்சினார். அவரின் மெச்சலே நான் பெற்ற ஓவிய அங்கீகாரம். அவர் ஓய்வு பெற்று சென்ற பின் தொடர்ந்துவந்த சில ஓவிய ஆசிரியர்களும் மகத்தானவர்கள்.
சாரணியத்திலும் தியாகராஜா மாஸ்டரே எங்களோடு. அவரது காலத்தில் சாரணியம் பல விருதுகளை தனதாக்கின. சாரணியத்தில் மகாஜனாவிற்கென்றொரு தனித்துவம் உண்டு, வடமாகாணத்தில். கம்பீர நடையும் அயராத உழைப்பும் சேவைமனப்பாண்பும் கண்டிப்பான பார்வையும் மகாஜனாவின் பழைய மாணவருமான திரு போஜன் அவர்களே கே. கே. எஸ். ற்கு பொறுப்பாகவும் பின் யாழ்மாவட்டம் தொடர்ந்து வடமாகாணத்தின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். குருளைச்சாரணியம், சாரணியம் என தொடர்ந்து ஆண்டு 9 வரைக்கும் பயணித்தேன். சாரணியத்தில் - உதவி புரியும் மனப்பாங்கு சகமனிதப்பண்பு அவசர சிகிச்சை பயணப்படுத்தல் சூழலியம் சமத்துவம் சகோதரத்துவம் பொதுச்சேவை போன்ற பண்பியல்கள் வித்தாகின என்னுள். சக பாடசாலைகளுக்கு செல்வது, நமது பாடசாலைக்கு சக பாடசாலைகள் வருவது, பாசறைகள் அமைத்து, இரவில் தங்கி பல பணிகளை பழகியது, பயன்தரு அனுபவமும், சுவையான நினைவுகளும். 'இந்திய அமைதி காக்கும் படை' எம் மண்ணில் கால் வைப்பதற்கு முன்னைய காலங்களில் சாரணச்சீருடையில் சில சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட ஞாபகங்களும் உண்டு. வாழைக்குத்தியின் இருமருங்கிலும் கயிறு கட்டி நமது பாடசாலை மைதானத்தில் நெருஞ்சி முள்ளு அப்புறப்படுத்தியது, பள்ளியின் மேற்குப்பக்க வெளிச்சுவரோரமும், பாடசாலை தங்கு விடுதியின் பின் சுவரோரமும் உழவாரம், தெருவேலை (தெருவலகு) மண்வெட்டியால் புல் செதுக்கியது, பன்னாலை வாசிகசாலை, வறுத்தலை பிள்ளையார் கோவில் வெளிவீதி துப்பரவாக்கியது , அம்பனை சந்தி பேருந்து தரிப்பு நிலையத்திற்கு (அம்பனை பஸ் ஸ்டாண்ட்) நமது பாடசாலை வர்ணமான மண்நிறம் பூசியது வரலாறு. 35 ஆண்டுகளுக்குப்பின் புதிய வர்ணம் பூசியதை சில காலத்துக்கு முன் முகநூலில் பார்த்து அறிந்து கொண்டேன். அம்பனை பஸ் ஸ்டாண்ட்டும் பின்னொரு பொழுதில் அமைதிப்படையின் பாதுகாப்பு அரணாகவும் (சென்றி பொய்ன்ட்) அதன் முன்னால் 'தம்பி மாமா கிளினிக்' (பிரகஸ்பதி) ராணுவ முகமாகவும் அமைந்த காட்சியை சித்திர வகுப்பில் நான் வரைந்தது பதிவு. அளவெட்டியில் இருந்து பாடசாலைக்கு வெள்ளைக்கொடி கட்டிய சைக்கிளில் செல்லும்பொழுது 'சென்றி போய்ன்ட்' முன்னால் இறங்கி சைக்கிளை உருட்டி முகாமை தாண்டும் வரை நடந்து சென்று அம்பனை சாப்பாட்டுக்கடையை கண்டதும் ஏறி இரண்டு மிதியில் பாடசாலை படலையை அடைந்து விடுவோம். எமது பாடசாலையின் இரு வாசலின் முன் வளைவுகளும் நமது பண்பாட்டுடன் தொடர்புடைய அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டு பல தசாப்தங்களுக்கு மேலாக நிமிர்ந்து நின்று பாடசாலையின் அடையாளமாகவே எம்மனக்கண்களில். ஜெயரட்ணம் மண்டபத்துக்கு பின்னாலும் துரையப்பா மண்டபத்துக்கு பின்னாலும் மாணவர்களது சைக்கிள் எறும்புகள் போன்று வரிசையாக தேக்குமரங்களோடு சாய்ந்து நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி எண்பதுகளின் சாட்சி. அக்காலத்தில் சைக்கிள்கள் ஒழுங்கைகளெல்லாம் ஓவியம் வரைந்தன.
இந்தியக் கண்டம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆபிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் இருந்து பிரிந்து நகர்ந்து ஆசிய கண்டத்துடன் மோதி இமயமலைத் தொடரை உருவாக்கிற்று. கண்ட நகர்வுகளின் புரிதல், நீரில் இருந்து உருவாகிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, ஊர்வன விலங்குகள் டைனோசர்கள் பறவைகள் மனிதன் நெருப்பு குகைஓவியம் விவசாயம் சக்கரம் மொழி மதம் விஞ்ஞானம் வரைக்குமான காலவரிசையின் எச்சங்களையும் சான்றுகளையும் அறிய அருங்காட்சியகம் செல்லும்போதெல்லாம் மகாஜனாவில் பாலர்வகுப்புக்கு முன்னால் இருந்த விஞ்ஞான கூடமே ஞாபகம் வரும். கர்ப்பப்பையில் இறந்த குழந்தைகள் மற்றும் ஊர்வன போன்றவை இரசாயன திரவத்தோடு (ஃபோமலின்) நிரப்பிய கண்ணாடி குவளைக்குள் பார்த்த காட்சியும் மணமும் இன்றும் மூக்கில். உயர்தர மாணவர்கள் தவளையை வெட்டி பரிசோதனை செய்கையில் திறந்த ஜன்னல் வழியாக நாம் எட்டிப் பார்த்தோம், ஆர்வத்தோடு. விஞ்ஞான கூடத்துக்கு முன்னால் தடியூண்டிப்பாய்தல் உயரம்பாய்தல் நீளம்பாய்தலுக்காக பரப்பிய மணல் மண்ணில் விளையாடினோம். அதனருகே உயர்ந்து வளர்ந்த மரத்திலிருந்து சொரியும் றோஸ் நிற கோண வடிவ பூக்களை (தபேபியா றோஸ் - Tabebuia rosea) சக மாணவர்களோடு சண்டையிட்டு பிடிப்பதும், அவ்வாறு மண்ணில் விழாமல் பிடித்த பூக்களை கசக்கி ரோட்டில் எறிந்தால் பரிசுப்பொருள் கிடைக்கும் என்றொரு கட்டுக்கதையை நம்பியதும், சிறுவயது சில்லறைச் செயல்கள். உலகப்புகழ் பெற்ற கராத்தே வீரரான ' புரூஸ்லீயின்' முகம் பதித்த 'ஸ்டிக்கரை' சட்டை பொத்தானில் ஓட்டி அழகு பார்ப்பதும் நமக்கு கைவந்த கலை. யுத்தத்தின் மத்தியிலும் சோலாப்புரி செருப்பு போன்ற சில கவர்ச்சி தரு பொருட்களில் கவரப்பட்டது, கால ஓட்டத்தில், சிறார்களாகிய எமது நாகரிகத்தின் வெளிப்பாடு.
நைட் ரைடர் Knight Rider, ஓடோமான் Automan ஸ்டார் ட்ரேக் Star Trek மனிமல் Manimal ஜெமினி மன் Gemini Man பக் ரோஜஸ் Buck Rogers போன்ற ஆங்கில தொலைக்காட்சித்தொடர்கள் 80 களில் பிரபல்யமானவை. தொலைக்காட்சித்தொடர்களில் சில காட்சிகளில் வரும் தாக்கி அழிக்கக்கூடிய ஒளிக்கீற்று ( Laser ) தற்போதைய போர்களில் பாவிக்கப்படுகின்றன. சென்ற ஆண்டு இறுதியில் அமெரிக்க ஆராட்சி விண்கலத்திற்கும் - ரஸ்சிய செயலிழங்கு நிலையெய்திய செயற்கைக்கோளுக்கும் இடையிலான மோதல் பதட்டத்தை ஏற்படுத்தியது நாமறிந்ததே. வானவியல் பற்றிய புரிதலின் போதெல்லாம் பாடசாலையின் விம்பம் மனதில். சந்திர மண்டலத்துக்கு செல்லும் விண்கலத்தின் மாதிரி உரு, எம்மிலும் சற்று உயரமான அளவில் கண்டு வியந்தேன் பாடசாலையில். பாடசாலையிலின் பெண்களுக்கான நுழை வாயிலின் வலது புற கட்டடத்தின் வெளி விறாந்தையில் நீண்ட காலமாக அசைவற்றிருந்தது அக்கலம். ஏன் தயாரித்தார்கள் , யார் தயாரித்தார்கள், எவ்வாறு தயாரித்தார்கள், இப்போ அவ்விண்கல மாதிரி உரு எங்கே ?.
தைத்திருநாள் வாழ்த்து மடல், முத்திரை, சில்லறைக்காசு, சூடான சுவரொட்டிகள் சேகரித்தல் தற்கால இலங்கையில் தட்டுப்பாடான 'நெஸ்பிறே' பெட்டிக்குள் - 80களில் கவாஸ்கர், கபில் தேவ் போன்ற துடுப்பாட்ட வீரர்களின் புகைப்படங்களை சேகரித்தல், கச்சாப்பொருட்கள், செய்தித்தாள் கட்டுரைகளை வெட்டி ஓட்டுதல் என்பன ஆவணப்படுத்துதலின் ஆரம்ப கல்வியாக பார்க்கலாம். நமது காலத்திலேயே ஒப்படை என்றொரு பாடம் நமது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது, எனக்கு கவலையை அளித்தது. அதன் தொடர்ச்சியை நாம் சாரணியத்தில் பின்பற்றினோம். CR கொப்பியில் கீறுதல் எழுதுதல் வெட்டி ஒட்டுதல் கச்சாப்பொருட்களை சேகரித்தல் என்பன. யாழ்நூலக நினைவுகளோடு ஆவணப்படுத்துதலின் அவசியம், நம்மவரின் இருத்தலின் தேவை. அதன் தொடர்ச்சியும் நீட்சியுமே இந்நூலை மலர் குழுவுடன் இணைந்து தயாரிப்பதில் ஆர்வமும் தேடலும் ஆவணப்படுத்துதலும்...
நினைவு தெரிந்த காலத்திலிருந்து மகாஜனா பாலர் வகுப்பில் சேர்வதற்கு முன்பாக பாடசாலையின் பெருமை பற்றி செவிமடுத்து பாடசாலையில் இணைவதற்கு ஆவலுடன் காத்திருந்த காலத்தின் நினைவுகளும் கனவுகளும். 1982ல் பாலர் வகுப்பில் ரோகினி ரீச்சரின் அரவணைப்பில் ஆரம்பித்தபின் பள்ளி வளாகத்தில் எனது வளரும் பருவத்தை நினைத்து கண்ட கனவுகளும், நினைவுகளும். 1990ன் இறுதியில் கல்லூரியை விட்டு விலகி தொடர் கல்வியை கொழும்பு இந்துக்கல்லூரியிலும் மேலும் ஹோட்டல் முகாமைத்துவ உயர்கல்வியையும் ஓவியக் கல்வியையும் கிரேக்க நாடான சைப்ரஸ் நாட்டில் கற்று அங்கேயே தொழில் புரிந்த அனுபவமும். அகதி அந்தஸ்து கோரி 2001 ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டை வந்தடைந்த பின்பும் பல்கலைக்கழகம் பாரிஸ் 13 ல் (வில்த்தனொஸ்) ஆவணப்படம், ஓவியக் கல்வியையும் கற்றுக்கொண்டேன். தலைநகரான பாரிஸ் நகர வாழ்வில் விசா தொழில் ஓவியக்கண்காட்சிகள் பிரெஞ்சுமொழி அடையாளம் காதலி திருமணம் மனைவி மகன் அப்பா ஓவியப்பயணம் வாழ்வு என கடுகதியில் கரையும் வாழ்வில், மகாஜன கல்லூரியின் நினைவுகளும், நினைவுகளின் நினைவுகளும் என்னோடு.
ஊர் கடந்து நகரம் கடந்து கடல் கடந்து கண்டம் கடந்து சீமையில் வாழ்ந்தாலும் இன்றும் எம்மை செப்பனிடும் பணியில் மகாஜனாவுக்கு பெரும் பங்கு உண்டு. மருத நிலத்தோடும் செம்மண்ணோடும் அமைந்த பாடசாலை எவ்வளவு நினைவுகளை புதைத்து விடுகிறது எம்முள். ஸ்தாபகர், அதிபர்கள், ஆசிரியர்கள் எமது பொக்கிஷம். மகாஜனா ஒரு பாடசாலை அல்ல நமக்கோர் பல்கலைக்கழகம்.
March 2022
VP. Vasuhan ( வாசுகன் )